

தோஹா: லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் 52 பந்துகளில் இரட்டைச் சதம் விளாசி இந்திய ஏ அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி உலக சாதனை படைத்துள்ளார்.
ஏசிசி ஆடவர் ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய ஏ அணியும், ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அணியும் மோதின. முதலில் விளையாடிய யுஏஇ அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய ஏ அணி 14.2 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
தொடக்க ஆட்டக்காரர்களாக வைபவ் சூர்யவன்ஷியும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். அபிஷேக் சர்மா 12 ரன்களிலும், அதைத் தொடர்ந்து வந்த பிரப்சிம்ரன் சிங் 3 ரன்களிலும் வீழ்ந்தனர்.
ஆனால் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி சிக்ஸர்களாக விளாசித் தள்ளினார். அவர் வெறும் 52 பந்துகளில் இரட்டைச் சதம் விளாசினார். 53 பந்துகளில் 7 பவுண்டரி, 28 சிக்ஸர்களுடன் 204 ரன்கள் விளாசி அவர் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் அதிவேக இரட்டைச் சதம் விளாசிய வீரர் என்ற உலக சாதனையை வைபவ் புரிந்தார். இதற்கு முன்பு 2024-ல் ஒடாகோ அணிக்கெதிராக கேண்டர்பர்ரி அணி வீரர் சாட் போவ்ஸ் 103 பந்துகளில் இரட்டைச் சதம் விளாசியிருந்ததே உலக சாதனையாக இருந்தது.
அதிவேக சதம்
மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இந்தப் போட்டியின்போது வெறும் 28 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய வீரர் ஜேக் பிரேசர் மெக்குர்க் 29 பந்துகளில் சதம் விளாசியதே சாதனையாக இருந்தது. இந்த வரிசையில் தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் விளாசி 3-வது இடத்தில் உள்ளார்.
40 பந்துகளில் 150
அதுமட்டுமல்லாமல் 40 பந்துகளிலேயே அவர் 150 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் அவரது ஸ்டிரைக் ரேட் 384.9-ஆக இருந்தது. இந்தப் போட்டியின்போது 28 சிக்ஸர்களை விளாசி அவர் உலக சாதனை படைத்தார்.
5 சாதனை
ஒரே போட்டியில் குறைந்த பந்துகளில் சதம், குறைந்த பந்துகளில் 150 ரன்கள், குறைந்த பந்து களில் இரட்டைச் சதம், ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள், அதிகபட்ச ஸ்டிரைக் ரேட் என 5 உலக சாதனைகளை சூர்யவன்ஷி படைத்துள்ளார். ஒரே போட்டியில் 5 சாதனைகளைப் படைத்த சூர்யவன்ஷிக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தென் ஆப்பிரிக்க அணி 494 ரன்கள் குவிப்பு