

டென்னிஸ் வீரர்கள் ஜோகோவிச் மற்றும் அல்காரஸ்
நியூயார்க்: இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது. செப்டம்பர் 13-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு பட்டம் வெல்ல மோத உள்ளனர்.
காயம் காரணமாக கடந்த 4 மாதங்களாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், தனது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்கும் முனைப்பில் களமிறங்குகிறார். போதிய பயிற்சி இல்லாதது அவருக்கு சவாலாக அமையக்கூடும்.
இருப்பினும் மற்றொரு முன்னணி வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் இத்தொடரில் பங்கேற்காததால், ஆடவர் ஒற்றையர் பிரிவில் அல்காரஸ் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது. 23 வயதான அல்காரஸ் ஏற்கெனவே இரண்டு முறை அமெரிக்க ஓபன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
செர்பிய நட்சத்திரமான நோவாக் ஜோகோவிச் 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்கும் முனைப்பில் களமிறங்குகிறார். இம்முறை அவர், அமெரிக்க ஓபனில் வாகை சூடினால் மார்கரெட் கோர்ட்டின் 24 கிராண்ட்ஸ்லாம் பட்ட சாதனையை முறியடித்து, அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்துவார்.
நான்கு முறை அமெரிக்க ஓபன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், கடைசியாக 2023-ல் கோப்பையைக் கைப்பற்றி இருந்தார். மேலும், 10 முறை அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். 39 வயதில் இரு வார காலங்கள் நடைபெறும் இந்த தொடரில் உடல்தகுதி சவால்கள் அதிகமாக இருந்தாலும், பெரிய தொடர்களில் சாதிப்பது ஜோகோவிச்சுக்கு புதிதல்ல.
அமெரிக்க ஓபன் தொடரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் உலகின் முதல்நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, தொடர்ச்சியாக 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறார். இதற்கு முன்னர் தொடர்ச்சியாக 3 முறை அமெரிக்க ஓபன் பட்டத்தை செரீனா வில்லியம்ஸ் (2012–2014) வென்றிருந்தார். இந்த சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு சபலென்காவுக்குக் கிடைத்துள்ளது. அரினா சபலென்கா கோப்பையை வெல்லும் பட்சத்தில் ஹாட்ரிக் பட்டங்களை வென்ற செரீனா வில்லியம்ஸ், கிறிஸ் எவர்ட், ரோஜர் ஃபெடரர், இவான் லென்டில், ஜான் மெக்கன்ரோ ஆகிய ஜாம்பவான்களின் வரிசையில் இணைவார்.
செரீனா, வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் மகளிர் இரட்டையர் பிரிவில் மீண்டும் இணைந்து இறங்குகின்றனர். இது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘வைல்டு கார்டு’ வாய்ப்பு மூலம் 2022-ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இருவரும் இணைந்து அமெரிக்க ஓபனில் விளையாடுகின்றனர். இவர்கள் இரட்டையர் பிரிவில் 14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். இதில் 2 அமெரிக்க ஓபன் பட்டங்களும் அடங்கும்.
தொடக்க நாளான இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெறும் முக்கியமான ஆட்டங்களில் உலகின் 7-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், 88-ம் நிலை வீரரான பிரான்ஸின் ஹியூகோ காஸ்டனுடன் மோதுகிறார். 4-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 48-ம் நிலை வீரரான அர்ஜெண்டினாவின் மரியானோ நவோனேவை சந்திக்கிறார். 20-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி பால், 94-ம் நிலை வீரரான ஹாங்காங்கின் கோல்மன் வோங்குடன் மோதுகிறார். 16-ம் நிலை வீரரான கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்ளிக், 248-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜே.ஜே.வுல்ஃப் உடன் மோத உள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் 3-ம் நிலை வீரராங்கனையான ஜெசிகா பெகுலா, 63-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் எலெனா-கேப்ரியேலா ரஸ்ஸை எதிர்த்து விளையாடுகிறார். 19-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, 106-ம் நிலை வீராங்கனையான சுலோவேனியாவின் வெரோனிகா எர்ஜாவெக்குடன் மோதுகிறார். 9-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, 87-ம் நிலை வீராங்கனையான அர்ஜெண்டினாவின் சோலானா சியராவை எதிர்கொள்கிறார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் வரலாற்றில் முதன்முறையாக ரூ.907 கோடி பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்பவர்களுக்கு தலா ரூ.46.2 கோடி பரிசுத் தொகை கிடைக்கும். முதல் சுற்றில் வெளியேறும் வீரர், வீராங்கனைக்குக் கூட ரூ.1.17 கோடி உறுதி செய்யப்பட்டுள்ளது. போட்டிகளை ஜியோஹாட்ஸ்டார் செயலி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையாகக் காணலாம்.