

சென்னை: சென்னை - சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே).
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்து வீசியது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. ஜோஷ் இங்லிஸ் 33 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். 10 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அவரது ஆட்டத்தில் அடங்கும். அந்த அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் பின்வரிசையில் வந்த ஷெபாஸ் அகமது 25 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். சிஎஸ்கே தரப்பில் ஜேமி ஓவர்டன் 3, அன்ஷுல் காம்போஜ் 2, நூர் அகமது 1 விக்கெட் கைப்பற்றினர். எல்எஸ்ஜி வீரர்கள் ஷெபாஸ் அகமது, ஷமி ஆகியோர் ரன் அவுட்டாகி விக்கெட்டை இழந்தனர். 204 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே அணி விரட்டியது.
முதல் விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்து 45 ரன்கள் சேர்த்தனர். 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த உர்வில் படேல் உடன் இணைந்து 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ருதுராஜ். இதில் உர்வில் படேல் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். 23 பந்துகளில் 65 ரன்களை அவர் விளாசினார். இதில் 8 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் ருதுராஜ் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரெவிஸ் 10, கார்த்திக் சர்மா 20 ரன்களில் வெளியேறினர்.
கடைசி 4 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பிரஷாந்த் வீர் மற்றும் ஷிவம் துபே இணைந்து சிஎஸ்கே-வை வெற்றி பெற செய்தனர். கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடுத்தடுத்து பறக்கவிட்டார் ஷிவம் துபே. அது சிஎஸ்கே அணியின் வெற்றி தருணமாக அமைந்தது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 5-வது இடம் பிடித்துள்ளது சிஎஸ்கே. 11 ஆட்டங்களில் 6 வெற்றி மற்றும் 5 தோல்வி பெற்றுள்ள சிஎஸ்கே அணி, 12 புள்ளிகளை பெற்றுள்ளது.