

ஹார்சென்ஸ்: டென்மார்க்கின் ஹார்சென்ஸ் நகரில் உபேர் கோப்பை பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ இடம் பெற்றிருந்த இந்திய மகளிர் அணி நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் சீனாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 0-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 16-21, 21-19, 19-21 என்ற செட் கணக்கில் போராடி வாங் ஸியி-யிடம் தோல்வி அடைந்தார். 2-வதாக நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிரியா கொஞ்செங்பாம், ஸ்ருதி மிஸ்ரா ஜோடி 11-21, 8-21 என்ற செட் கணக்கில் யு ஷெங்ஷு, டான் நிங் ஜோடியிடம் வீழ்ந்தது.
இதன் பின்னர் நடைபெற்ற ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இஷாராணி பருவா 20-22, 13-21 என்ற செட் கணக்கில் ஷெய் யுஃபெயிடம் தோல்வி அடைந்தார். 4 வதாக நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, கவிப்பிரியா செல்வம் ஜோடி 21-10, 12-21, 19-21 என்ற செட் கணக்கில் லூவோ ஷுமின், ஜாங் ஷுஷியன் ஜோடியிடம் வீழ்ந்தது. கடைசியாக நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் தேவிகா சிங் 21-19, 17-21, 10-21 என்ற செட் கணக்கில் வென்ஜிங்கிடம் தோல்வி அடைந்தார்.
இந்திய அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் டென்மார்க்கிடம் தோல்வி அடைந்திருந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் உக்ரைனை வென்றிருந்தது. இதன் மூலம் ஒரு புள்ளியுடன் இந்திய அணி தனது பிரிவில் 3-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது. லீக் சுற்றில் முதல் 2 இடங்களை பிடித்த சீனா, டென் மார்க் அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறின.