

புலவாயோ: 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை சூப்பர் சிக்ஸின் கடைசி சூப்பர் சிக்ஸ் லீக் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று மோத உள்ளன. இந்தப் போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகம் என்பதால் இந்தப் போட்டியின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நமீபியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றன. குரூப் 1-ல் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வெற்றி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன.
அதேநேரத்தில், குரூப் 2-ல் இங்கிலாந்து அணி மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. மீதமிருக்கும் ஓர் இடத்துக்காக இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று (பிப்ரவரி 1) மோதவுள்ளன.
இந்த கடைசி சூப்பர் சிக்ஸ் லீக் போட்டி ஜிம்பாப்வேயின் புலவாயோவிலுள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
புள்ளிப் பட்டியலில் 6 (நிகர ரன் விகிதம் +3.337) புள்ளிகளுடன் இந்திய அணி சற்று அதிகமான வாய்ப்புகளைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியோ 4 (நிகர ரன் விகிதம் +1.484) புள்ளிகளுடன் இருப்பதால், இந்தியாவுக்கு எதிராக அதிக ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனவே, இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.