

துபாய்: யு19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.
நடப்பு யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று துபாயிலுள்ள ஐசிசி அகாடமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் விளையாடிய இந்திய அணி 46.1 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக ஆரோன் ஜார்ஜ் 88 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார். இதில் 12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும்.
கேப்டன் ஆயுஷ் மாத்ரே 38, வைபவ் சூர்யவன்ஷி 5, விஹான் மல்ஹோத்ரா 12, வேதாந்த் திரிவேதி 7, அபிக்யான் குன்டு 22, கனிஷ்க் சவுகான் 46, கிலான் படேல் 6, ஹெனில் படேல் 12, தீபேஷ் தேவேந்திரன் 1 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது சயாம், அப்துல் சுபான் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
நிகாப் ஷபிக் 2 விக்கெட்களையும், அலி ராஸா, அகமது ஹுசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். பின்னர் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய பாகிஸ்தான் அணி 41.2 ஓவர்களில் 150 ரன்களுக்கு சுருண்டது.
பாகிஸ்தான் அணி தரப்பில் உஸ்மான் கான் 16, சமீப் மின்ஹாஸ் 9, அலி ஹசன் பலோச் 0, அகமது ஹுசைன் 4, கேப்டன் பர்ஹான் யூசப் 23, ஹுசைபா அஹ்சான் 70, ஹம்சா ஜாஹூர் 4, அப்துல் சுபான் 6, முகமது சயாம் 2, நிகாப் ஷபிக் 2, அலி ராஸா 6 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி கண்டது.
இந்திய அணி தரப்பில் தீபேஷ் தேவேந்திரன், கனிஷ்க் சவுகான் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். கிஷன் குமார் சிங் 2 விக்கெட்களையும், கிலான் படேல், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர். ஆட்ட நாயகனாக 3 விக்கெட்களைக் கைப்பற்றிய கனிஷ்க் சவுகான் தேர்வு செய்யப்பட்டார்.
மலேசியாவுடன் மோதல்: இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் மலேசியாவுடன் மோதவுள்ளது. வரும் 16-ம் தேதி துபாயிலுள்ள திசெவன்ஸ் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.
கைகுலுக்க மறுப்பு: போட்டியின் முடிவில் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துவிட்டு பெவிலியன் வந்துவிட்டனர். பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டிகளின் போது அந்த அணி வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்குவதில்லை.
நேற்று துபாயில் நடைபெற்ற யு19 ஆசியக் கோப்பை போட்டியின் முடிவிலும். இந்திய வீரர்கள் கைகுலுக்காமல், இந்திய சீனியர் அணி வீரர்களைப் பின்பற்றினர்.