

கொல்கத்தா: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், வெற்றிக் கோப்பையை தனியொரு மதம் சார்ந்த கோயிலுக்கு கொண்டு சென்றது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யுமான கீர்த்தி ஆசாத் விமர்சித்துள்ளார்.
இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியை 96 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி. இந்த வெற்றிக்கு பிறகு கோப்பை உடன் அகமதாபாத் நகரில் உள்ள அனுமன் கோயிலுக்கு ஐசிசி தலைவர் ஜெய் ஷா, இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா உள்ளிட்டோர் சென்று வழிபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது.
இந்நிலையில், அதை கீர்த்தி ஆசாத் விமர்சித்துள்ளார். எக்ஸ் சமூக வலைதளத்தில் இது குறித்து அவர் பதிவிட்டுள்ளார். “1983-ல் நாங்கள் உலகக் கோப்பையை வென்ற போது, எங்கள் அணியில் இந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர்களும் இருந்தனர். இந்திய தாய்நாட்டுக்கு வெற்றிக் கோப்பையை நாங்கள் கொண்டுவந்தோம்.
இப்படி இருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கோப்பை ஏன் தனியொரு மதம் சார்ந்து கொண்டு செல்ல வேண்டும். இந்திய அணியின் இந்த செயல் வெட்கக்கேடானது. ஏன் ஒரு மசூதிக்கோ? ஒரு தேவாலயத்துக்கோ? ஒரு குருத்வாராவுக்கோ கொண்டு செல்லவில்லை. இந்திய அணி ஒட்டுமொத்த இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சூர்யகுமார் யாதவ் அல்லது ஜெய் ஷா குடும்பத்தை மட்டுமல்ல. இந்த கோப்பை 140 கோடி இந்திய மக்களுக்கானது” என அந்த பதிவில் கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார்.