

4 விக்கெட்டுகள் வீழ்த்திய அதிசயராஜ் டேவிட்சன்.
திண்டுக்கல்: டிஎன்பிஎல் தொடரில் நேற்று திண்டுக்கலில் நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் சுரேஷ் குமார் 32 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 58 ரன்களும், ராஜ் குமார் 19 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 45 ரன்களும் விளாசினர். நெல்லை அணி தரப்பில் சச்சின் ரதி 3, ஹரிஷ் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
183 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது 18 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக முகிலேஷ் 45 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் விளாசினார்.
ரித்திக் ஈஸ்வரன் 18, கேப்டன் சோனு யாதவ் 12 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்கை ரன்னை எட்டவில்லை. திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன் 3 ஓவர்களை வீசி 24 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஈஸ்வரன், சஞ்ஜய் யாதவ், ராஜ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.