“பிரதமருக்குப் பிறகு கடினமான பொறுப்பு” - கவுதம் கம்பீரை பாராட்டிய சசி தரூர்

“பிரதமருக்குப் பிறகு கடினமான பொறுப்பு” - கவுதம் கம்பீரை பாராட்டிய சசி தரூர்
Updated on
1 min read

நாக்பூரில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. மற்றும் பிரபல எழுத்தாளர் சசி தரூர், அவரை மனமாரப் புகழ்ந்தார்.

“பிரதமருக்குப் பிறகு இந்தியாவில் மிகக் கடினமான வேலை கவுதம் கம்பீருக்கே” என குறிப்பிட்ட சசி தரூர், இந்த கருத்தை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

நாக்பூரில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, இருவருக்கும் இடையே மனம் திறந்த உரையாடல் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் சசி தரூர், “நாக்பூரில் என் பழைய நண்பர் கவுதம் கம்பீருடன் நேர்மையான உரையாடல் நடந்தது. பிரதமருக்குப் பிறகு இந்தியாவில் மிகக் கடினமான பொறுப்பை ஏந்தியவர் அவர். தினமும் கோடிக்கணக்கான மக்களால் விமர்சிக்கப்படுகிறார். அதையும் அமைதியாக எதிர்கொண்டு தன்னம்பிக்கையுடன் முன்னேறுகிறார். அவரது அமைதியான உறுதி மற்றும் திறமையான தலைமைத்துவத்துக்கு பாராட்டுக்கள். இன்றே தொடங்கும் இந்த தொடரில் வெற்றியடைய வாழ்த்துகள்” எனப் பதிவிட்டார்.

இதற்கு பதிலளித்த கவுதம் கம்பீர், “நன்றி டாக்டர் சசி தரூர். ஒரு பயிற்சியாளரின் ‘வரம்பற்ற அதிகாரம்’ குறித்து பேசப்படும் உண்மையும் தர்க்கமும் காலப்போக்கில் தெளிவாகும். அதுவரை, என்னை என் சொந்த அணியினருடன் ஒப்பிட்டு விமர்சிப்பதை நான் கேளிக்கையாகவே பார்க்கிறேன்” என X-இல் பதிவிட்டார்.

இருவரும் சந்தித்த புகைப்படத்தையும் சசி தரூர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இதற்கிடையே, நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர், 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தயாரிப்பில் முக்கியமானதாக கருதப்படுகிறது. பிப்ரவரி 7 முதல் தொடங்க உள்ள அந்த உலகக் கோப்பைக்கு முன்னதாக, இந்த தொடர் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நாக்பூரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“பிரதமருக்குப் பிறகு கடினமான பொறுப்பு” - கவுதம் கம்பீரை பாராட்டிய சசி தரூர்
டி20 உலகக் கோப்பையில் வங்கதேச போட்டிகளை மாற்ற முடியாது: ஐசிசி அதிரடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in