

சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. 193 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணியானது 7 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
சிஎஸ்கே அணியின் பந்துவீச்சில் நூர் அகமது 4 ஓவர்களை வீசி 21 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். சிஎஸ்கே அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ளது.
போட்டிக்கு பின்னர் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது: மெல்ல மெல்ல தற்போதுதான் அணி ஒரு வடிவம் பெறுவதை என்னால் உணர முடிகிறது. ஒவ்வொருவருக்கும் தங்களுடைய பொறுப்பு என்ன, எந்த ஓவர்களை வீச வேண்டும், என்ன லெந்த்களில் பந்துவீச வேண்டும் என்பது ஓரளவிற்குத் தெரிந்திருக்கிறது.
அணியின் தேவைக்கு ஏற்ப அவர்கள் தங்களை மிகச் சிறப்பாக மாற்றிக்கொண்டும், பழக்கப்படுத்திக்கொண்டும் வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நான் ஏற்கெனவே சொன்னது போல, மெல்ல மெல்ல நாங்கள் முன்னேறி வருகிறோம். நாங்கள் நல்ல ஸ்கோரை தற்காத்துக் கொண்டோம்.
முதல் ஏழு அல்லது எட்டு ஓவர்களுக்குப் பிறகு ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறியது. எனவே 192 ரன்கள் என்பது சராசரிக்கும் மேலானது என்றே கருதினேன். ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் திரும்ப ஆரம்பித்தது, அதேபோல் கொஞ்சம் நின்று வந்தது. முதலில் நாங்கள் 220 ரன்கள் வரை சேர்க்க முடியும் என கருதினோம். ஆனால் ஆடுகளத்தின் தன்மையால் 190 அல்லது 180 ரன்கள் சிறந்த ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தோம். பந்துவீச்சில் சிறந்த பவர்பிளேயை அமைக்க வேண்டியிருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.