

அகமதாபாத்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. மார்கோ யான்சன் வீசிய 2-வது ஓவரில் அபிஷேக் சர்மா 3 பவுண்டரிகளை விரட்டிய நிலையில் சஞ்சு சாம்சன் கடைசி பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டார்.
இந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் விளாசப்பட்டன. ஓட்னீல் பார்ட்மேன் வீசிய 4-வது ஓவரில் சஞ்சு சாம்சன் 3 பவுண்டரிகளை விரட்டினார். மார்கோ யான்சன் வீசிய அடுத்த ஓவரில் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் சேர்க்கப்பட 5 ஓவர்களின் முடிவில் 56 ரன்களை குவித்தது இந்திய அணி.
கார்பின் போஷ் வீசிய அடுத்த ஓவரின் 3-வது பந்தை சிக்ஸருக்கு விளாசிய அபிஷேக் சர்மா, லெக் திசையில் வீசப்பட்ட அடுத்த பந்தை விளாச முயன்ற போது மட்டையில் உரசியபடி விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக்கிடம் கேட்ச் ஆனது. 21 பந்துகளை சந்தித்த அபிஷேக் சர்மா ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் சேர்த்தார்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 5.4 ஓவர்களில் 63 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய திலக் வர்மாவும் அதிரடியாக விளையாடினார். 9 ஓவர்களில் இந்திய அணி 97 ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 22 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஜார்ஜ் லின்டே பந்தில் போல்டானார். இதையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 7 பந்துகளில் 5 ரன்கள் எடுத்த நிலையில் கார்பின் போஷ் பந்தில் மிட் ஆஃப் திசையில் நின்ற டேவிட் மில்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹர்திக் பாண்டியா சிக்ஸர்களும், பவுண்டரியுமாக விளாசினார். ஜார்ஜ் லிண்டே வீசிய 14-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாசினார். இந்த ஓவரில் திலக் வர்மாவும் ஒரு சிக்ஸர் பறக்கவிட 27 ரன்கள் சேர்க்கப்பட்டன.
மட்டையை சுழற்றிய திலக் வர்மா 30 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். இது அவருக்கு 6-வது அரை சதமாக அமைந்தது. திலக் வர்மாவுக்கு உறுதுணையாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசினார்.
இதன் மூலம் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்தார். இந்த வகையில் 2007-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி 20 ஆட்டத்தில் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரை சதம் விளாசி முதலிடத்தில் உள்ளார்.
மட்டையை சுழற்றிய ஹர்திக் பாண்டியா 25 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்த நிலையில் ஓட்னீல் பார்ட்மேன் பந்தில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 42 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் விளாசிய நிலையில் ரன் அவுட் ஆனார். 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. ஷிவம் துபே 3 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 10 ரன்களும், ஜிதேஷ் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
தென் ஆப்பிரிக்க அணி சார்பில் கார்பின் போஷ் 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஓட்னீல் பார்ட்மேன், ஜார்ஜ் லின்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். மார்கோ யான்சன் 4 ஓவர்களை வீசி 50 ரன்களை தாரைவார்த்த நிலையில் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.
232 ரன்கள் இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியா 30 ரன்களில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது. ஆட்ட நாயகன் விருதை ஹர்திக் பாண்டியாவும், தொடர் நாயகன் விருதை வருண் சக்ரவர்த்தியும் பெற்றனர்.