

துபாய்: யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது. இலங்கை உடனான அரையிறுதி ஆட்டத்தை 8 விக்கெட்டுகளில் இந்திய அணி வெற்றி பெற்றது.
துபாயில் கடந்த 12-ம் தேதி இந்த தொடர் தொடங்கியது. இதில் மொத்தம் 8 அணிகள், 2 பிரிவுகளாக விளையாடின. ‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, முதல் சுற்றில் மூன்று ஆட்டங்களில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றது. இந்த சுற்றில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தி இருந்தது.
இந்நிலையில், இந்த தொடரின் அரையிறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. மழை காரணமாக ஒவ்வொரு அணிக்கும் தலா 20 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்து வீசியது. 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது இலங்கை.
139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. கேப்டன் ஆயுஷ் மாத்ரே 7 ரணிலும், வைபவ் சூர்யவன்ஷி 9 ரன்னிலும் வெளியேறினர். அதன் பின்னர் 3-வது விக்கெட்டுக்கு இணைந்த விஹான் மல்ஹோத்ராவும், ஆரோன் ஜார்ஜும் 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் அரை சதம் கடந்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
18 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் உடன் இந்தியா விளையாடுகிறது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை பாகிஸ்தான் அணி வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது.