

இந்தூர்: நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
தொடர்ந்து ராஜ்கோட்டில் நடை பெற்ற 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்திய அணி தனது சொந்த மண்ணில் கடந்த 2019-ம் தேதி மார்ச் முதல் நடைபெற்ற இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இழந்தது இல்லை. இந்த சாதனையை தக்கவைக்கும் முனைப்புடன் இந்திய செயல்படக்கூடும்.
அதேவேளையில் நியூஸிலாந்து அணி கடந்த 1989-ம் ஆண்டு முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு முறை ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி உள்ளது. ஆனால் ஒருமுறை கூட அந்த அணி தொடரை வென்றது கிடையாது. தற்போது இந்த சோகத்துக்கு முடிவு கட்ட அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க கவுதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி கடந்த காலங்களில் முதன்முறையாக பல்வேறு தொடர்களை இழந்துள்ளது. நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. மேலும் இலங்கையில் நடைபெற்ற இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடரையும் பறிகொடுத்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும்.
ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் பேட்டிங்கில் நடு ஒவர்களில் இந்திய அணியின் ரன் குவிப்பை நியூஸிலாந்து பந்து வீச்சாளர்கள் வெகுவாக கட்டுப்படுத்தியிருந்தனர். அதேவேளையில் இலக்கை துரத்திய போது நியூஸிலாந்து அணி, சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அபார செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தது. அதிலும் டேரில் மிட்செல் இந்திய அணியின் பந்துவீச்சு திட்டங்களை சுக்குநூறாக நொறுக்கினார்.
இன்றைய போட்டி நடைபெறும் ஹோல்கர் ஆடுகளம் அளவில் சிறியது. இதனால் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய அளவில் ஆடுகளம் கைகொடுக்காது. எனவே பந்துவீச்சில் ஏதேனும் சிறிய தவறுகள் செய்தால் கூட அதற்கான பலனை அனுபவிக்க நேரிடும். இது ஒருபுறம் இருக்க நடு ஓவர்களில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சில் ரன்கள் குவிக்க சிரமப்படுவது கவலையாக மாறி உள்ளது.
இந்த ஓவர்களில் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்வது மிகவும் முக்கியம். மேலும் இந்திய பேட்ஸ்மேன்கள் கட்டுக்கோப்புடன் விளையாடுவதற்கு பதிலாக தேவையில்லாத ஷாட்களை விளையாடுவதற்கு தள்ளப்படுகின்றனர். ஹோல்கர் மைதானத்தில் 350 ரன்களுக்கு மேல் எளிதாக குவிக்க முடியும் என்பதால் நடு ஓவர்களில் இந்திய அணி வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.
டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா அதிரடியான தொடக்கம் கொடுத்து வந்தாலும் விரைவாக அவர், தனது விக்கெட்டை பறிகொடுப்பது அணியின் அழுத்தத்தை அதிகரிப்பதாக உள்ளது. இதனால் அவர், களத்தில் நிலைத்து விளையாட முயற்சிக்கக்கூடும். மேலும் கடந்த ஆட்டத்தில் விரைவாக ஆட்டமிழந்த விராட் கோலியும் மட்டையை சுழற்றுவதில் தீவிரம் காட்டக்கூடும். கடந்த ஆட்டத்தில் சதம் விளாசிய கே.எல்.ராகுலிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும்.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. நிதிஷ் குமார் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நீக்கப்பட்டு ஆயுஷ் பதோனி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. பதோனி பேட்டிங்குடன் சுழலில் கைகொடுக்கக்கூடும். அதே வேளையில் அர்ஷ்தீப் சிங் தொடக்க ஓவர்களில் பந்துகளை ஸ்விங் செய்யும் திறன் கொண்டவர். மேலும் இறுதிக்கட்ட ஓவர்களில் யார்க்கர்களையும் வீசக்கூடியவர். நியூஸிலாந்து அணியில் அதிக அளவிலான வலது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீசும் கோணம் பலன் அளிக்கக்கூடும்.
நியூஸிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் பலர் விளையாடாத போதிலும் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. டெவன் கான்வே, டேரில் மிட்செல், வில் யங், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆட்டத்தில் 131 ரன்கள் விளாசிய டேரில் மிட்செல்லிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த செயல்திறன் வெளிப்படக்கூடும்.
அதேவேளையில் பந்துவீச்சாளர்கள் போதிய அனுபவம் மற்றும் ஆடுகளத்தில் இருந்து எந்த உதவியும் கிடைக்காவிட்டாலும் வேறுபாடுகள் மற்றும் கடின லென்ந்த்கள் மூலமாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அந்த அணியின் பந்துவீச்சு துறை மீண்டும் ஒரு முறை இந்திய பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
ஆடுகளம் எப்படி? - இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் இந்திய அணி இதற்கு முன்னர் விளையாடிய 5 ஒருநாள் ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது. இங்கிலாந்து (2006, 2008), மேற்கிந்திய தீவுகள் (2011), தென் ஆப்பிரிக்கா (2015) மற்றும் ஆஸ்திரேலியா (2017) அணிகளை இந்த மைதானத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது.