

மும்பை: ஆடவருக்கான ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
20 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 7-ம் தேதி அமெரிக்காவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியை நேற்று மும்பையில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அறிவித்தார். அப்போது கேப்டன் சூர்யகுமார் யாதவ், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா ஆகியோரும் உடன் இருந்தனர்.
துணிச்சல் மிக்க முடிவாக துணை கேப்டனாக செயல்பட்டு வந்த ஷுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிக்கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடக்கூடிய ரிங்கு சிங்கும் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
ஒருநாள் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வந்த ஷுப்மன் கில், சமீபகாலமாக சர்வதேச டி 20 போட்டிகளில் தொடக்க வீரராக உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தவில்லை.
அதிலும் அவரது ஸ்டிரைக் ரேட் கவலை அளிக்கும் வகையில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி தொடக்க ஓவர்களில் விரைவாக ரன்களை குவித்து வரும் நிலையில் ஷுப்மன் கில்லின் பேட்டிங் அதற்கு தகுந்தவாறு அமையவில்லை.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முடிவடைந்த டி20 தொடரின் முதல் 3 ஆட்டங்களிலும் ஷுப்மன் கில் முறையே 4, 0, 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேவேளையில் சையது முஸ்டாக் அலி டி20 தொடரில் 2 சதங்கள், 2 அரை சதங்களுடன் 517 ரன்கள் குவித்துள்ள இஷான் கிஷன் மீது தேர்வுக்குழுவினரின் பார்வை பட்டுள்ளது.
இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. அதே வேளையில் கடந்த சில டி20 தொடர்களில் அணியில் இடம் பெற்றிருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தொடர்கின்றனர். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ராவுடன் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ரிங்கு சிங், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.