இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: முதல் நாளில் இந்தியா 300 ரன்கள் குவிப்பு

தேவ்தத் படிக்கல் 117, ஷுப்மன் கில் 50 ரன்கள் விளாசல்
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: முதல் நாளில் இந்தியா 300 ரன்கள் குவிப்பு
Updated on
3 min read

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. தேவ்தத் படிக்கல் சதம் விளாசி அசத்தினார். கேப்டன் ஷுப்மன் கில் அரை சதம் அடித்தார்.

கொழும்பு நகரில் உள்ள சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான சரண்ஷ் ஜெயின் இடம் பெற்றார். அதே வேளையில் குல்தீப் யாதவ் வைரஸ் தொற்று காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் இடம் பெறவில்லை.

இலங்கை அணியில் கமில் மிஷாரா அறிமுக வீரராக இடம் பெற்றார். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி நிதானமான தொடக்கம் கொடுத்தது. கே.எல்.ராகுல் 32 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் லகிரு குமரா பந்தில் ஆட்டமிழந்தார். ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே அகலமாக வீசப்பட்ட பந்தை கே.எல்.ராகுல் அடிக்க முயன்ற போது பந்து மட்டை விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆனது.

முதல் விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி 10.4 ஓவர்களில் 37 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் பொறுமையாக விளையாடி இன்னிங்ஸை கட்டமைத்தார். மறுமுனையில் சீராக ரன்கள் சேர்த்து வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 53 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் அசிதா பெர்னாண்டோ பந்தில் போல்டானார்.

இதையடுத்து ஷுப்மன் கில் களமிறங்கினார். மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 25 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்தது. தேவ்தத் படிக்கல் 13, ஷுப்மன் கில் 11 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். உணவு இடைவேளைக்கு பின்னர் இந்த ஜோடி தொடர்ந்து விளையாடியது. நிதானமாக விளையாடிய ஷுப்மன் கில் தனது 9-வது அரை சதத்தை கடந்தார். சிறப்பாக பேட் செய்து வந்த ஷுப்மன் கில் 108 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் அசிதா பெர்னாண்டோ பந்தில் நிரோஷன் டிக்வெல்லாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு ஷுப்மன் கில், தேவ்தத் படிக்கல் ஜோடி 120 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் 15 பந்துகளில், 3 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய

ரவீந்திர ஜடேஜா, தேவ்தத் படிக்கலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். தேவ்தத் படிக்கல் 168 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் தனது 2-வது சதத்தை அடித்தார். சிறப்பாக பேட் செய்து வந்த தேவ்தத் படிக்கல் 193 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் எடுத்த நிலையில் கேஷரா நுவந்தா பந்தில் போல்டானார். இதைத் தொடர்ந்து துருவ் ஜூரெல் களமிறங்கினார்.

ரவீந்திர ஜடேஜா 83 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் அசிதா பெர்னாண்டோ பந்தில் போல்டானார். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 85 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. துருவ் ஜூரெல் 21 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 7 ரன்களும், சரண்ஷ் ஜெயின் 4 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கை அணி தரப்பில் அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்களை வீழ்த்தினார். கேஷரா நுவந்தா, லகிரு குமாரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க இந்திய அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

ரிஷப் பந்த் காயம்

கொழும்பு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பேட்டிங்கின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் காயம் அடைந்தார். 58-வது ஓவரின் முதல் பந்தை இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லகிரு குமாரா பவுன்ஸராக வீசினார். இதை ரிஷப் பந்த் ‘புல்ஷாட்’ விளையாட முயன்றார், ஆனால் பந்து அவரது இடது மணிக்கட்டு எலும்பில், முழங்கைக்கு கீழே பலமாக தாக்கியது. இதனால் ரிஷப் பந்த் ‘ரிட்டர்யடு ஹர்ட்’ முறையில் வெளியேறினார். அவர், 15 பந்துகளை சந்தித்து 3 ரன்கள் எடுத்திருந்தார்.

இருமுறை தப்பித்த தேவ்தத் படிக்கல்

கொழும்பு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல் இரு முறை ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்தார். லகிரு குமாரா வீசிய 11-வது ஓவரின் கடைசி பந்தில் தேவ்தத் படிக்கல் கொடுத்த கேட்ச்சை சோனல் தினுஷா தவறவிட்டார். அப்போது தேவ்தத் படிக்கல் ரன் ஏதும் எடுக்காமல் இருந்தார்.

தொடர்ந்து கேஷரா நுவந்தா வீசிய 14-வது ஓவரின் 3-வது பந்தில் தேவ்தத் படிக்கல் சிலிப் திசையில் கொடுத்த கேட்ச்சை இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பிடிக்கத் தவறினார். அப்போது தேவ்தத் படிக்கல் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார். இந்த இரு வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்ட தேவ்தத் படிக்கல் 117 ரன்கள் விளாசி அசத்தினார்.

ஜெய்ஸ்வால் vs அசிதா

கொழும்பு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோவுடன் இந்திய தொடக்க பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஜெய்ஸ்வாலின் ஹெல்மெட் அசிதா பெர்னாண்டோவின் நெற்றியில் உரசியது. இதனால் ஐசிசி-யின் நடத்தை விதிகளை ஜெய்ஸ்வால் மீறியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த விவகாரத்தில் ஜெய்ஸ்வாலுக்கு அபராதம் விதிக்கப்படக்கூடும்.

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: முதல் நாளில் இந்தியா 300 ரன்கள் குவிப்பு
100 மீட்டர் ஓட்டத்தில் உசைன் போல்ட் சாதனையை தகர்த்த ஹியூமனாய்டு ரோபோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in