முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
Updated on
2 min read

தரம்சாலா: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நேற்று நடைபெற்றது. மழை காரணமாக 25 ஓவர்களை கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 24.5 ஓவர்களில் 194 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 51 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் விளாசினார். இது அவருக்கு 9-வது சதமாக அமைந்தது. கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி 27, அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 26 ரன்கள் சேர்த்தனர்.

இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர்களான வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார், சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷ் துபே ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். தொடக்கத்தில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 14 ரன்களில் இருந்தபோது அர்ஷ்தீப் சிங் வீசிய பந்து அவரது கால்காப்பை தாக்கியது. ஆனால் பந்து மட்டையில் பட்டதாக தவறாக உணர்ந்து இந்திய அணி எல்பிடபிள்யூ முறையில் அவுட் கேட்கவில்லை. டி.வி.ரீப்ளேவில் பந்து லெக் ஸ்டெம்பை தாக்குவது தெரிந்தது.

195 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 22.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஷுப்மன் கில் 66 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 84 ரன்களும், கே.எல்.ராகுல் 19 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 39 ரன்களும் விளாசினர்.

முன்னதாக இந்திய அணிக்காக அதிக வயதில் விளையாடிய வீரர் என்ற பெருமையுடன் களமிறங்கிய ரோஹித் சர்மா (39 வயது 44 நாட்கள்) 16 ரன்னில் ரன் அவுட் ஆனார். இஷான் கிஷன் 34 ரன்களில் ரஷித் கான் பந்தில் போல்டானார். ஸ்ரேயஸ் ஐயர் 12 ரன்களில் ஜியாவுர் ரஹ்மான் பந்தில் வெளியேறினார்.

7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் வரும் 17-ம் தேதி லக்னோவில் நடைபெறுகிறது.

48 பந்துகளில் சதம்: தரம்சாலா போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரரான ரஹ்மனுல்லா குர்பாஸ் 48 பந்துகளில் தனது விளாசினார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்காக குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னர், அந்த அணியின் முகமது ஷாஷாத் கடந்த 2010-ம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு எதிராக 72 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

மேலும் இந்திய அணிக்கு எதிராக குறைந்த பந்துகளில் சதம் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையையும் ரஹ்மனுல்லா குர்பாஸ் பெற்றார். இந்த வகையில் பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி கடந்த 2005-ம் ஆண்டு கான்பூர் போட்டியில் 45 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
ஃபோலரின் பலோகன் அசத்தல் ஆட்டம்: பராகுவே அணியை பந்தாடியது அமெரிக்கா | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in