

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்
பர்மிங்காம்: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 258 ரன்களில் இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. இதில் இங்கிலாந்து சார்பில் ஜோ ரூட் மற்றும் லியாம் டாசன் ஆகியோர் அரைசதம் விளாசினர்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 4-0 என வென்றது. இதில் முதல் போட்டி மழை காரணமாக ரத்தாகி இருந்தது. டி20 தொடரை அடுத்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் தற்போது விளையாடி வருகின்றன.
இந்த தொடரில் முதல் ஆட்டம் இன்று பிற்பகல் பர்மிங்காம் நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 21.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து தடுமாறியது.
ஜேக்கப் பெத்தல் 14, பென் டக்கெட் 43, ஹாரி ப்ரூக் 1, பட்லர் 5, சாம் கரண் 0, வில் ஜேக்ஸ் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி, கடுமையான அழுத்தத்தை ஆட்டத்தில் எதிர்கொண்டது. அப்போது 7-வது விக்கெட்டுக்கு இணைந்த ஜோ ரூட் மற்றும் லியாம் டாசன் ஜோடி, 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
டாசன், 83 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 228 ரன்கள் எடுத்திருந்தது. ஆர்ச்சர் 12, ரஷீத் 1, டங் 0 என ஆட்டமிழந்தனர். இறுதிவரை களத்தில் இருந்த ஜோ ரூட், 76 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார். அவரது இன்னிங்ஸில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும்.
47.5 ஓவர்களில் 258 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் அக்சர் படேல் 4, பிரசித் கிருஷ்ணா 2, குர்நூர் பிரார் 2, பும்ரா 1, துபே 1 விக்கெட் கைப்பற்றினர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற இந்திய அணி 259 ரன்கள் இலக்கை எட்ட வேண்டும். இந்திய அணியின் ஆடும் லெவனில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் உள்ளனர்.