

சாய் சுதர்சன், குல்தீப் யாதவ்
குவாஹாட்டி: 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 549 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்க அணி. இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 27 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய வெற்றி பெற வாய்ப்பு இல்லை. போராடினால், டிரா செய்ய வாய்ப்பு உள்ளது. இதில் எது நிகழ்ந்தாலும் தென் ஆப்பிரிக்க அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்கும் என்பது தெளிவு.
குவாஹாட்டி பர்சபாரா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 489 ரன்கள் குவித்தது. செனுரன் முத்துசாமி 109 ரன்களும், மார்கோ யான்சன் 93 ரன்களும் விளாசினர். இதையடுத்து விளையாடிய இந்திய அணி 83.5 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58, வாஷிங்டன் சுந்தர் 48 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ யான்சன் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்திய அணிக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் 288 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்தது. ரியான் ரிக்கெல்டன் 13, எய்டன் மார்க்ரம் 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 78.3 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
ரியான் ரிக்கெல்டன் 35, எய்டன் மார்க்ரம் 29, கேப்டன் தெம்ப பவுமா 3, டோனி டி ஸோர்ஸி 49 ரன்களில் ஆட்டமிழந்தனர். சதம் அடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 180 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் போல்டானார். வியான் முல்டர் 35 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்களையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
549 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் மார்கோ யான்சன் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசிய பந்தை கட் ஷாட் விளையாட முயன்ற போது பந்து பட்டை விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் கைல் வெர்ரெய்னிடம் கேட்ச் ஆனது. மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுல் 30 பந்துகளில், 6 ரன்கள் எடுத்த நிலையில் சைமன் ஹார்மரின் பந்தில் போல்டானார்.
இந்திய அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் 4-வது நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. ரன்கள் சேர்க்க தடுமாறிய சாய் சுதர்சன் 25 பந்துகளில், 2 ரன்களும் குல்தீப் யாதவ் 22 பந்துகளில், 4 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 522 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி நாளை (நவ.26) கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
இந்திய அணி வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. அதேவேளையில் கடுமையாக போராடினால் மட்டுமே தோல்வியை தவிர்க்க போட்டியை டிராவில் முடிக்க முடியும். இதில் எது நிகழ்ந்தாலும் தென் ஆப்பிரிக்க அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்கும். ஏனெனில் அந்த அணி கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.
குவாஹாட்டி டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்தால் தென் ஆப்பிரிக்க அணி தொடரை 1-0 என கைப்பற்றும். ஒருவேளை இந்திய அணி தோல்வியை சந்தித்தால் டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி தென் ஆப்பிரிக்க கோப்பையை வெல்லும். கடைசி நாள் ஆட்டத்தில் சைமன் ஹார்மர், கேசவ் மஹாராஜ், செனுரன் முத்துசாமி ஆகியோரது சுழற்பந்து வீச்சையும், மார்கோ யான்சனின் ஷார்ட் பால் வியூகத்தையும் இந்திய அணி சமாளிப்பது கடினம் என்றே கருதப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க அணி முதலும், கடைசியுமாக கடந்த 1999-ம் ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என வென்றிருந்தது. அப்போது மும்பையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 4 விக்கெட்கள் வித்தியாசத்திலும், பெங்களூருவில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 71 ரன்கள் வித்தியாசத்திலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருந்தது. இதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி 5 முறை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய நிலையில் 3 முறை தொடரை இழந்தது. இரு முறை தொடரை டிரா செய்திருந்தது.