

தன்வி சர்மா
தைபே சிட்டி: தைபே ஓபன் சூப்பர் 300 பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தன்வி சர்மா சாம்பியன் பட்டம் வென்றார்.
தைபே ஓபன் பாட்மிண்டன் தொடர் சீன தைபேயில் உள்ள தைபே சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா, வியட்நாம் வீராங்கனை நியூயென் து லின்னுடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே தன்வி ஷர்மா அதிரடியாக விளையாடினார். சிறப்பாக ஆடிய தன்வி ஷர்மா முதல் செட்டை 21-16 என வென்றார்.
இதைப் போலவே 2-வது செட்டிலும் விறுவிறுப்பாக விளையாடிய தன்வி ஷர்மா அந்த செட்டை 21-16 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்தப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான உன்னதி ஹூடா அரையிறுதியில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் கால் இறுதியில் தோல்வி அடைந்தார். வெற்றி குறித்து தன்வி சர்மா கூறும்போது, “இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்தப் போட்டியில் நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன் என்று நினைக்கிறேன். இந்தத் தொடரின் ஒவ்வொரு சுற்றிலும் எனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொண்டே வந்தேன். அனைத்து ஆட்டங்களிலும் எனது முழுத் திறனையும் வெளிப்படுத்தினேன்” என்றார்.