

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சார் முஸ்டாபிஸுர் ரஹ்மானை கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்திருந்தது. இந்நிலையில் வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இருந்து முஸ்டாபிஸுர் ரஹ்மானை விடுவிக்குமாறு பிசிசிஐ தெரிவித்திருந்தது.
இந்த நடவடிக்கைக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐசிசி டி 20 உலகக் கோப்பையில் பாதுகாப்பு காரணங்களை கருதி பங்கேற்க முடியாது என தெரிவித்தது. மேலும் இந்தியாவில் வங்கதேசம் பங்கேற்கும் 4 ஆட்டங்களையும் இலங்கைக்கு மாற்ற வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு கடிதம் எழுதியது. ஆனால் இதை ஐசிசி ஏற்க மறுத்தது. இதனால் டி 20 உலகக் கோப்பையை புறக்கணிக்கும் முடிவை நோக்கி வங்கதேச கிரிக்கெட் வாரியம் செல்ல ஆயத்தமாகி வருகிறது.
இந்த கருத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநரான நஜ்முல் இஸ்லாம், டி 20 உலகக் கோப்பையை வங்கதேசம் புறக்கணிக்கும் பட்சத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு எந்தவித இழப்பீட்டு தொகையையும் வழங்கமாட்டோம். இவர்கள் என்ன செய்துவிட்டார்கள், எந்த ஐசிசி தொடரையும் வெல்லவில்லை. இவர்களுக்காக எதற்காக கோடிக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு வீரர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து வங்கதேசத்தில் நடைபெற்று வரும் வங்கதேச பிரிமீயர் லீக் டி 20 தொடரின் இரு ஆட்டங்களை கடந்த வியாழக்கிழமை தேசிய அணிக்காக விளையாடி வரும் சீனியர் வீரர்கள் புறக்கணித்தனர். நிலைமை கட்டுப்பாட்டை மீறியதை தொடர்ந்து நஜ்முல் இஸ்லாம், வாரியத்தின் நிதிக்குழுவில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நலவாரியத்தின் தலைவர் முகமது மிதுனை அழைத்து வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்போது வீரர்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவதூறு கருத்து தெரிவித்த நஜ்முல் இஸ்லாம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலிறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் பிபிஎல் தொடரில் பங்கேற்க வங்கதேச வீரர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை வீரர்கள் புறக்கணித்த 2 ஆட்டங்களும் நேற்று நடத்தப்பட்டன.
இதற்கிடையே வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “நஜ்முல் இஸ்லாம் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. இதற்காக வருந்துகிறோம். முறைப்படி எந்தவொரு வாரிய இயக்குநரும், வாரிய உறுப்பினரும் அறிக்கை வெளியிடாவிட்டால் அதற்கு வாரியம் பொறுப்பேற்காது” எனத் தெரிவித்துள்ளது.
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் மற்றொரு இயக்குநரான இப்திகார் ரஹ்மான் கூறும்போது, “கடந்த இரண்டு நாட்களில் சில துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடந்துள்ளன, அதனால்தான் பிபிஎல் போட்டிகளை நடத்த முடியவில்லை. இந்தக் கருத்துக்களை தெரிவித்த இயக்குநர் நிதிக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நாங்கள் எங்கள் அரசியலமைப்பைப் பின்பற்றுகிறோம், அதன் படி, அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர் பதிலளிக்க 48 மணிநேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது, இது சனிக்கிழமை நண்பகலில் முடிவடையும். பின்னர் இந்த விவகாரம் ஒழுங்குமுறைக் குழுவுக்கு செல்லும். நாங்கள் நாள் முழுவதும் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அவரை இங்கு அழைத்து வர விரும்பினோம், ஆனால் எங்களால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை” என்றார்.
‘கொலை மிரட்டல் வருகிறது’
வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நலவாரியத்தின் தலைவர் முகமது மிதுன் கூறும்போது, “நாட்டுக்கு எதிராக எந்த வார்த்தையையும் நான் பயன்படுத்தவில்லை. கிரிக்கெட் மற்றும் வீரர்களின் நலனுக்காக மட்டுமே பேசினேன். இங்கே எந்த தனிப்பட்ட பிரச்சினையும் இல்லை. நான் ஒரு அமைப்பின் தலைவராக இருப்பதால், வீரர்களின் உரிமைகள் பற்றிப் பேசவில்லை என்றால், நான் இந்த பதவியில் இருப்பதால் என்ன பயன்? யாரும் நாட்டை விட உயர்ந்தவர்கள் அல்ல.
இந்த விவகாரத்தில் எனக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. பொதுவாக தெரியாத எண்களில் இருந்து போன் அழைப்புகள் வந்தால் நான் எடுக்கமாட்டேன். ஆனால் குறுந்தகவல்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் குரல் பதிவுகள் வாயிலாக மிரட்டல்கள் வருகின்றன. இதை தடுக்க முடியவில்லை. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியத்திடம் எதுவும் நான் கூறவில்லை. என்னை போன்று சில வீரர்களுக்கும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
நாங்கள் நிச்சயமாக வீரர்களின் பாதுகாப்பை விரும்புகிறோம். உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் யாரும் சென்று விளையாடுவதை நாங்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. ஆனால் அதே நேரத்தில், இது உலகக் கோப்பை தொடர். இதன் காரணமாக வீரர்கள் விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வாரியமும் அரசும் ஒரு நல்ல முடிவை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.