

புதுடெல்லி: 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட இந்தியாவுக்குப் பயணம் செய்யப் போவதில்லை என்ற தனது நிலைப்பாட்டை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் வங்கதேச கிரிக்கெட் அணி பங்கேற்பது குறித்து விவாதிக்க, வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் ஐசிசி மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.
இந்தக் கூட்டத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் முகமது அமினுல் இஸ்லாம், துணைத் தலைவர்கள் முகமது ஷகாவத் ஹொசைன் மற்றும் ஃபாரூக் அகமது, இயக்குநர் மற்றும் கிரிக்கெட் செயல்பாட்டுக் குழுவின் தலைவர் நஜ்முல் அபதீன், மற்றும் தலைமைச் செயல் அதிகாரி நிஜாம் உத்தீன் சௌத்ரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனையின் போது, பாதுகாப்புச் சிக்கல்களைக் காரணம் காட்டி, டி20 உலகக்கோப்பை போட்டித் தொடருக்காக இந்தியாவுக்குப் பயணம் செய்யப் போவதில்லை என்ற தனது முடிவை வங்கதேச கிரிக்கெட் வாரியம் மீண்டும் உறுதிப்படுத்தியது. வீரர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வங்கதேசத்தின் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே உள்ள மைதானங்களுக்கு மாற்றுமாறு ஐசிசியை அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் மீண்டும் வலியுறுத்தியது.
இருப்பினும், போட்டி அட்டவணை மற்றும் பயணத் திட்டம் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்டதை சுட்டிக்காட்டி, தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி கேட்டுக்கொண்டது. இருப்பினும், தங்கள் வீரர்கள், அதிகாரிகள் மற்றும் துணைப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வே தங்களின் முதன்மை முன்னுரிமை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
இந்த விவகாரத்தில் சாத்தியமான தீர்வுகளை ஆராய்ந்து, இரு தரப்பினருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முடிவை எட்டுவதற்காக, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இந்த விவகாரத்தில் ஐசிசியுடன் ஆக்கப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியமும் உறுதியளித்தது.