T20 WC 2026 அலசல்: கொஞ்சம் சிந்தித்து செயல்பட்டு இருந்தால் ஆப்கான் வென்றிருக்கலாம்... எப்படி?

T20 WC 2026 அலசல்: கொஞ்சம் சிந்தித்து செயல்பட்டு இருந்தால் ஆப்கான் வென்றிருக்கலாம்... எப்படி?
Updated on
2 min read

ஆப்கான் - தென் ஆப்பிரிக்கா இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பைப் போட்டி அகமதாபாத்தில் சொற்ப ரசிகர்களுக்கு மாரடைப்பையே ஏற்படுத்தியிருக்குமாறு திக் திக் போட்டியாகவே இருந்தது. ஆனாலும் இப்போது யோசித்துப் பார்த்தால் ஆப்கன் அணி கொஞ்சம் யோசித்துச் செயல்பட்டிருந்தால் போட்டியை வென்றிருக்கலாமோ என்றே தோன்றுகிறது.

எப்படிப் பார்த்தாலும் டி20 உலகக்கோப்பையின்... ஏன் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே இது போன்ற ஒரு போட்டி இதுவரை நடந்ததில்லை என்றுதான் கூற வேண்டும், அந்த வகையில் இந்தப் போட்டி யார் வென்றாலும் யார் தோற்றாலும் வரலாற்றுப் போட்டியே. மறக்க முடியாத போட்டியே.

‘சோக்கர்ஸ்’ என்று தென் ஆப்பிரிக்க அணியைத்தான் கிண்டலடிப்பார்கள், அப்படித்தான் நேற்றும் ஆயிற்று, கடைசி ஓவரில் ரபாடா முதல் பந்தில் விக்கெட் எடுத்தார், ஆப்கன் கதை முடிந்தது என்று நினைக்கையில் அது நோ-பால் என்று ஆன போது நிச்சயம் ஆப்கான் பக்கம் இன்று அதிர்ஷ்டம் அடிக்கிறது என்றுதான் பலரும் நினைத்திருப்பார்கள், அதுவும் ரபாடா அடுத்து ஒரு சிக்சரையும் கொடுத்து மீண்டும் ஒரு நோபாலையும் வீச ஆப்கானுக்கு வெற்றி மிக மிக அருகில் இருந்தது.

இன்னமும் 2 பந்துகள் மீதமிருக்கும் போது எதற்காக அந்த 2வது ரன்னை ஓட வேண்டும்? சிங்கிள் பூர்த்தி செய்த போதே ஸ்கோர்கள் சமன் ஆகிவிட்டது. 2 பந்துகளை வீச நேர்ந்திருந்தால் ரபாடா மீண்டும் ஒரு நோ-பாலை வீசியிருக்கலாம். விக்கெட்டை எடுத்தாலும் பிரச்சனை இல்லை, ஆட்டம் டை தான் ஆகும். ஆனால் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் அந்த 2 பந்துகளில் நிச்சயம் ஒரு சிங்கிள் எடுத்து ஆப்கான் சுலபமாக வென்றிருக்கலாம். இத்தகைய முதிர்ச்சிகரமான முடிவை எடுக்க அங்கு அனுபவ வீரர் தேவை. ஆனாலும் இது காமன் சென்ஸ்தான். அங்கே சீல் செய்திருக்க வேண்டும், கோட்டை விட்டனர்.

முதல் சூப்பர் ஓவரில் ஆப்கான் அஸ்மத்துல்லா ஓமர்சாயின் அபார ஹிட்டிங்கினால் 17 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணியில் டேவல்டு பிரேவிஸும் டேவிட் மில்லரும் இறங்கினர். இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஃபசலுல்லாஹக் பரூக்கி வீசினார்.

பிரேவிஸை 3-ம் பந்தில் அருமையான ஸ்லோயர் ஒன்னினால் வீழ்த்தவும் செய்தார், ஆனால் அந்தோ பரிதாபம்! கடைசி பந்தை சற்றே ஆஃப் ஸ்டம்பிலிருந்து விலக்கி வைடாக வீசி வெளியே எடுத்திருந்தால் எட்ஜ் பவுண்டரியானால் கூட தென் ஆப்பிரிக்கா தோற்றிருக்கும் ஆனால் இடுப்புயர புல்டாஸை வீசினார், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அற்புதமாக அதை லாங் ஆனில் சிக்ஸ் விளாச மீண்டும் இன்னொரு சூப்பர் ஓவருக்குச் சென்றது.

இது போன்ற தருணங்களில் வலது கை பவுலராக இருந்தால் லெக் கட்டரையும் இடது கை பவுலராக இருந்தால் ஆஃப் கட்டரையும் சற்றே மட்டைக்குத் தள்ளி வீச வேண்டும். யார்க்கர் ட்ரை பண்ணக்கூடாது, ஏனெனில் அது இப்படி இடுப்புயர ஃபுல்டாசாகவே மாறும். அல்லது தாழ்வான ஃபுல்டாஸாகக் கூட வீசலாம். ஸ்லோயர் ஒன்னை வீசியிருக்கலாம். இவ்வளவு தெரிவுகள் பவுலருக்கு உள்ளது.

ஏனெனில் தேவைப்படும் ரன்கள் 7. சிக்சர் அடித்தால் டை. ஆகவே பவுண்டரி போகுமாறு வீசியிருந்தால் கூட ஆப்கான் வெற்றி பெற்றிருக்கும். அதே போல் 2வது சூப்பர் ஓவரில் அஸ்மத்துல்லா ஓமர் சாய் ஒரு புல்டாஸை வீசினார் டேவிட்மில்லர் அதனை அந்த ஓவரின் 3வது சிக்சருக்குத் தூக்கினார், இதுவும் தேவையில்லாத ஒரு பந்து வீச்சே.

அந்தப் பந்தை ஸ்லோயர் ஒன்னாகவோ, வைடாகவோ வீசியிருந்தால் நிச்சயம் ஒன்று அல்லது இரண்டு ரன்கள்தான் வந்திருக்கும். 23 ரன்களை விட்டுக்கொடுத்தார் அஸ்மத்துல்லா ஓமர்சாய். குறைகூற முடியாது ஏனெனில் கடும் பிரஷர் சூழ்நிலைகளில் சிந்திப்பது கடினம் தான், போட்டு முடித்தால் போதும் என்று பவுலரும் சூப்பர் ஓவரின் 6 பந்துகளை முடித்தால் போதும் என்று பேட்டர்களும் நினைக்கும் மனநிலைக்கு வந்து விடுவார்கள்.

ஆப்கான் செய்த மற்றுமொரு தவறு குர்பாஸை 2வது சூப்பர் ஓவரில் தொடக்கத்தில் இறக்கியிருக்க வேண்டும். அவர் இறங்கிய பிறகு 3 சிக்சர்களை விளாசினார். கடைசி பந்தை கேசவ் மகராஜ் வீசும்போது குர்பாஸ் கொஞ்சம் சிந்தித்து ஆஃப் சைடில் வைடாக வீசுவார் என்பதைக் கணித்து கொஞ்சம் ஆஃப் திசையில் நகர்ந்து மகராஜைக் குழப்பியிருக்கலாம், ஆனால் அவர் செய்யவில்லை.

இப்படியாக கொஞ்சம் சிந்தித்து, நிதானித்து போட்டியின் பிரஷரை தங்களுக்குள் எடுத்துக் கொள்ளாமல் புறவயமாக யோசித்துச் செயல்பட்டிருந்தால் ஆப்கன் வென்றிருக்கலாம்.

உண்மையில் 2வது சூப்பர் ஓவருக்கு ஆட்டம் செல்லும் போது தென் ஆப்பிரிக்க வீரர்களின் தோள்கள் தொங்கி விட்டன. அவர்கள் அதற்குத் தயாராக இல்லை என்பதையே அது காட்டியது, ஆனால் அனுபவம் அவர்களுக்கு வெற்றி பெற்றுத் தந்து விட்டது. ஆப்கான் இன்னும் நிறைய யோசித்து, சிந்தித்து ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

T20 WC 2026 அலசல்: கொஞ்சம் சிந்தித்து செயல்பட்டு இருந்தால் ஆப்கான் வென்றிருக்கலாம்... எப்படி?
நமீபி​யா​வுடன் இன்று மோதல்: 2-வது வெற்றியை பெறும் முனைப்பில் இந்திய அணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in