

பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் படம்
சிட்னி, போண்டி கடற்கரைப் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சங்கங்கள் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்தியுள்ளன.
ஹனுக்கா பண்டிகையின் முதல் இரவை முன்னிட்டு கூடியிருந்த மக்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அண்ட் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், “போண்டியில் நடந்த கொடூர சம்பவம் எங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், நண்பர்கள், யூத சமூகத்தினர் மற்றும் ஆஸ்திரேலிய மக்களுடன் எங்கள் எண்ணங்களும் ஆதரவும் இருக்கின்றன.” என்று வேதனையும் வருத்தமும் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணித் தலைவர் பேட் கம்மின்ஸ் சமூக வலைதளத்தில், “போண்டியில் நடந்த கொடூரத்தினால் என் மனம் உடைந்து நொறுங்கியது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். முடிந்தவர்கள் ரத்த தானம் செய்ய முன்வருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக அணிகள் தயாராகி வரும் அடிலெய்ட் ஓவலில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. இந்தப் பின்னணியில், போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தென் ஆஸ்திரேலிய முதல்வர் பீட்டர் மலினாஸ்கஸ் தெரிவித்தார். “இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை. மக்களின் பாதுகாப்பே முக்கியம்” என்றார்.
சிட்னியில் வசிக்கும் ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன், “இது அனைவரையும் உலுக்கிய நாள். நாங்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்கிறோம்” என தெரிவித்தார்.
சம்பவ இடத்திலிருந்த மைக்கேல் வான்! இதற்கிடையில், முன்னாள் இங்கிலாந்து அணித் தலைவர் மைக்கேல் வான், தாக்குதல் நடந்த நேரத்தில் போண்டியில் குடும்பத்துடன் உணவகத்தில் இருந்ததாக கூறியுள்ளார். பாதுகாப்பு காரணமாக உணவகம் பூட்டப்பட்டு, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உள்ளே தங்க வைக்கப்பட்டதாக அவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். “நம்ப முடியாத அனுபவம். நம்மைச் சுற்றி நடப்பதை உணர முடிந்தாலும் ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை” என அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே தாக்குதலில் காயமடைந்த 27 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் இவர்களில் 2 குழந்தைகளும் அடங்குவர்.