

இந்தியாவில் வந்து இந்திய அணியை 2-0 என்று ஒயிட் வாஷ் செய்வதெல்லாம் நடக்கும் காரியமல்ல, இது அசாதாரணமான சாதனை என்று தென் ஆப்பிரிக்காவின் தோல்வியே அறியாத டெஸ்ட் கேப்டன் தெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வந்து இந்திய பேட்டர்களை ஸ்பின் வலையில் சிக்க வைத்த செலக்ட் பவுலர்களில் சைமன் ஹார்மரும் இணைந்துள்ளார். இதற்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவ்வளவாக வீசி அனுபவம் இல்லாத சாண்ட்னர் ஒயிட் வாஷ் தோல்விக்குக் காரணமாக இருந்தார். அதே தொடரில் மும்பையில் ஏற்கெனவே நம்முடன் 10 விக்கெட்டுகளையும் ஒரே இன்னிங்சில் கைப்பற்றிய அஜாஜ் படேல் 2024-ல் மும்பையில் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியைக் காலி செய்தார்.
2024-ல் ஹைதராபாத்தில் பாஸ்பால் இங்கிலாந்து அணியிடம் ஹைதராபாத்தில் உதை வாங்கிய போது டாம் ஹார்ட்லி 231 ரன்கள் இலக்கை இந்திய அணி எடுக்கவிடாமல் 7 விக்கெட்டுகளைச் சாய்த்து இந்திய அணியை 202 ரன்களுக்குச் சுருட்டினார். இத்தனைக்கும் இங்கிலாந்து அந்த டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் 190 ரன்கள் பின்னிலையில் இருந்தது. 2017-ல் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஓகீஃப் இவர் புனேயில் 12 விக்கெட்டுகளைச் சாய்த்து இந்திய கதையை முடித்தார்.
2012-ல் மாண்டி பனேசர், கிரேம் ஸ்வான் இந்திய அணியைக் காலி செய்து தொடரை இங்கிலாந்து வென்றது. 2000-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா 2-0 என்று வெற்றி பெற்ற போது சொத்தை ஸ்பின்னர் நிக்கி போயே இந்திய அணியைக் காலி செய்தார். அதற்கு முன்னர் 1999-ல் சக்லைன்முஷ்டாக் 20 விக்கெட்டுகளை இந்திய மண்ணில் சாய்த்தார்.
இந்த ஸ்பின் மடிதல்களிலேயே சக்லைன் முஷ்டாக்கை மட்டும்தான் நாம் ஏற்றுக் கொள்ள முடியும். மற்றபடி அனுபவமற்ற பவுலர்கள்தான் இந்திய அணியை சொந்த மண்ணில் காலி செய்துள்ளனர். எது எப்படியிருந்தாலும் தென் ஆப்பிரிக்க அணியின் இந்த வெற்றித் திருப்பத்தின் பின்னால் உள்ளது என்ன என்பதை பவுமா மனம் திறந்து பேசியுள்ளார்:
“இந்தியாவில் வந்து 2-0 என்று வெற்றி பெற்றுச் செல்வதெல்லாம் எப்போதும் நடக்கக் கூடிய காரியமல்ல. எங்கள் எல்லாருக்கும் இந்த வெற்றி இனிமையானதாக இருக்கக் காரணம் எப்போதும் ஆட்ட முடிவில் நாங்கள் எதிர் முனையில் அதாவது தோல்வி முனையில்தான் இருந்தோம். இந்த முறை முனை மாறியதில் இனிமை, மகிழ்ச்சியை உணர்கிறோம்.
களத்தில் இறங்கினால் என்ன செய்ய வேண்டும், எப்படி ஆட வேண்டும் என்ற நோக்கில் எங்களிடம் பெரிய மன மாற்றம் ஏற்பட்டது என்பதைக் கூற வேண்டும். எங்கள் முன்னால் என்ன இருக்கிறதோ அதற்கேற்ப தகவமைத்துக் கொள்ளவே விரும்பினோம். வீரர்களும் களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதில் முனைப்பை வெளிப்படுத்தினர்.
ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த ஒரு வீரரும் அணிக்கான பணியைச் செய்து முடிக்க முடியும் என்ற வலுவான நம்பிக்கை எங்கள் அனைவரிடத்திலும் இருந்தது. தங்கள் ரோல் என்ன என்பதில் வீரர்களும் தெளிவாக இருந்தனர். ஒரு கேப்டனாக சில சமயங்களில் ஒரு பவுலரிடமிருந்து பந்தைப் பறிப்பது கடினமாகவே இருக்கும். எல்லோருமே பந்து வீசவே விரும்புவார்கள் சூழ்நிலை என்னவாக இருந்தாலும்... ஆகவே ஒரு பவுலரை கட் செய்வது என்பது கடினம். பேட்டிங்கிலும் இதுதான் நிலை.
எங்கள் அணியில் 150 ரன்கள் அடிக்கும் வீரர்கள் இல்லை. ஆனால் நாங்கள் 4-5 பேர் 60-70 ரன்களை எடுப்பவர்கள் இருக்கிறோம். இப்போது இந்த அணி நல்ல நிலையில் இருக்கிறது.
சைமன் ஹார்மர், ஸ்பின்னராகவும் வீரராகவும் நிறைய அனுபவம் உள்ளவர். கேஷவ் மஹராஜுக்கு உறுதுணையாக உள்ளனர். அணியில் போட்டி இருப்பது ஆரோக்கியமானது. கேஷவ், சைமன் ஹார்மர் இருவரது பந்து வீச்சையும் கட் செய்வது என்பது எனக்குக் கடினமே. இந்தத் தொடரில் சைமன் தான் எங்கள் நாயகன். கேஷவ்தான் பொதுவாக இத்தகைய நிலையில் இருப்பார்.
10 ஆண்டுகள் சென்று இந்தியாவுக்கு வருகிறேன், எல்லாம் மாறியிருக்கின்றன, ஆனால் சில இனிமையான நினைவுகளுடன் செல்கிறேன். பெரிய அணியான இந்திய அணிக்கு எதிராக கோட்டைக் கடந்து 2-0 என்று வென்றது ஒரு மிகப்பெரிய முயற்சியாகும்.” என்றார் பவுமா.