

பெங்களூருவில் நடைபெற்று வரும் 2026 துலீப் டிராபி முதல் அரையிறுதியில், சென்ட்ரல் சோனுக்கு எதிராக ஈஸ்ட் சோன் அணிக்காக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த சென்ட்ரல் சோன் அணி 80.1 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் ரிங்கு சிங் 88 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். யஷ் தாக்கூர் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் சேர்த்தார். ஈஸ்ட் சோன் பந்துவீச்சில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், அபிஜித் சர்க்கார் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முகமது ஷமி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஈஸ்ட் சோன், தொடக்கத்திலேயே சென்ட்ரல் சோன் பந்துவீச்சை சிதறடித்தது. குறிப்பாக, 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி தனது வழக்கமான அதிரடி பாணியில் விளையாடி ரன்களை வேகமாக குவித்தார்.
சூர்யவன்ஷி 81 பந்துகளில் 92 ரன்கள் விளாசினார். அவரது இன்னிங்ஸில் 7 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் இடம்பெற்றன. அவரது ஸ்டிரைக் ரேட் 113.58 ஆகும். வெறும் 42 பந்துகளில் அரைசதத்தை எட்டிய அவர், அதன் மூலம் துலீப் டிராபி வரலாற்றில் அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். அப்போது அவருக்கு வயது 15 ஆண்டுகள் 157 நாட்கள்.
சதத்தை நெருங்கி... 92 ரன்களில் ஆட்டமிழப்பு:
சூர்யவன்ஷி சதத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த நிலையில், 81 பந்துகளில் 92 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்ஷ் துபே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சதத்தை எட்ட இன்னும் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் அவர் வெளியேறியது ஈஸ்ட் சோனுக்கு சிறிய ஏமாற்றமாக அமைந்தது.
சூரியவன்ஷியும் சதம் நெருங்கும் சமயத்தில் ஆட்டமிழப்பது ஒரு வழக்கமாகி வருகிறது. இது போன்று ஆட்டமிழப்பதை அவர் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் சேவாக் பாணியில் அதிரடி பெரிய சதங்களை அவரால் எடுக்க முடியும்.
சூர்யவன்ஷி சதம் அடித்திருந்தால், துலீப் டிராபியில் இளம் வயதில் சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் 36 ஆண்டுகால சாதனையையும் முறியடித்திருக்க முடியும். சச்சின் 1990-91 சீசனில் 17 வயது 262 நாட்களில் சதம் அடித்திருந்தார். இவரது அதிரடி ஆட்டத்தினால் ஈஸ்ட் சோன் அணி 37 ஓவர்களிலேயே 200 ரன்களை எட்டி வலுவாகச் சென்று கொண்டுள்ளது