இந்திய அணிக்கு பதிலடி கொடுத்த தென் ஆப்​பிரிக்கா: 2-வது ஒருநாள் போட்டி ஹைலைட்ஸ்

இந்திய அணிக்கு பதிலடி கொடுத்த தென் ஆப்​பிரிக்கா: 2-வது ஒருநாள் போட்டி ஹைலைட்ஸ்

Published on

ராய்ப்​பூர்: இந்தியாவுக்கு எதி​ரான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி​யில் 4 விக்கெட்டுகள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

சத்​தீஸ்கர் மாநிலம் ராய்ப்​பூரில் நேற்று நடை​பெற்ற 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் டாஸ் வென்ற தென் ஆப்​பிரிக்க அணி பீல்​டிங்கை தேர்வு செய்​தது. அந்த அணி​யில் 3 மாற்​றங்​கள் செய்​யப்​பட்டு இருந்​தன. ரியான் ரிக்​கெல்​டன், பிரனேலன் சுப்​ராயன், ஒட்​னீல் பார்ட்​மேன் ஆகியோர் நீக்​கப்​பட்டு கேப்​டன் தெம்பா பவு​மா, கேசவ் மஹா​ராஜ், லுங்கி நிகிடி ஆகியோர் சேர்க்கப்​பட்​டனர். இந்​திய அணி​யில் எந்​த​வித மாற்​ற​மும் செய்யப்​பட​வில்​லை.

முதலில் பேட் செய்த இந்​திய அணி 50 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 358 ரன்​கள் குவித்​தது. ரோஹித் சர்மா 8 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 14 ரன்​கள் எடுத்த நிலை​யில் நந்த்ரே பர்​கர் பந்தில் விக்​கெட் கீப்​பர் குயிண்​டன் டி காக்​கிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். மற்​றொரு தொடக்க வீர​ரான யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 38 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 22 ரன்​கள் எடுத்த நிலை​யில் மார்கோ யான்​சன் பந்தை விளாச முயன்ற போது ஸ்கொயர் லெக் திசை​யில் கார்​பின் போஷிடம் கேட்ச் ஆனது.

3-வது விக்​கெட்​டுக்கு விராட் கோலி​யுடன் இணைந்த ருது​ராஜ் கெய்க்​வாட் தொடக்​கத்​தில் நிதான​மாக​வும் அதன் பின்​னர் அதிரடி​யாக​வும் விளை​யாடி பார்ட்​னஷிப்பை கட்​டமைத்து ஆட்டத்தை முன்​னெடுத்​துச் சென்​றார். இந்த ஜோடி ஒரு ரன்னை 2 ரன்​களாக​வும் தேவை​யான நேரத்​தில் பவுண்​டரி, சிக்​ஸர்​களும் விளாசி ரன்​கள் குவித்​தது. ருது​ராஜ் கெய்க்​வாட் 77 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 12 பவுண்​டரி​களு​டன் தனது முதல் சதத்தை விளாசினார். அவர், மார்கோ யான்​சன், கேசவ் மஹா​ராஜ் ஆகியோரது பந்​துகளில் சிக்​ஸர் அடித்து அசத்​தி​னார்.

மறு​புறம் சீராக ரன்​கள் சேர்த்த விராட் கோலி 90 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் தனது 53-வது சதத்தை விளாசி​னார். மட்​டையை சுழற்​றிய அவர், லுங்கி நிகிடி மற்​றும் மார்கோ யான்​சன் பந்​துகளில் சிக்​ஸர் பறக்​க​விட்​டிருந்​தார். 156 பந்​துகளில், 195 ரன்​கள் குவித்த இந்த ஜோடியை மார்கோ யான்​சன் பிரித்​தார். ருது​ராஜ் கெய்க்​வாட் 83 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 12 பவுண்டரிகளு​டன் 105 ரன்​கள் எடுத்த நிலை​யில் டீப் ஃபைன் லெக் திசை​யில் டோனி டி ஸோர்​ஸி​யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்​தார்.

அப்​போது இந்​திய அணி​யின் ஸ்கோர் 35.4 ஓவர்​களில் 257 ரன்களாக இருந்​தது. அடுத்த சில ஓவர்​களில் விராட் கோலி ஆட்டமிழந்​தார். 93 பந்​துகளை சந்​தித்த விராட் கோலி 2 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 102 ரன்​கள் எடுத்த நிலை​யில் லுங்கி நிகிடி பந்தை சிக்​ஸருக்கு விளாச முயன்ற போது லாங் ஆன் திசை​யில் எய்​டன் மார்க்​ரமிடம் கேட்ச் ஆனது. இதன் பின்​னர் களமிறங்​கிய வாஷிங்​டன் சுந்​தர் 8 பந்​துகளில் ஒரு ரன் எடுத்த நிலை​யில் ரன் அவுட் ஆனார்.

இறு​திக்​கட்ட ஓவர்​களில் தனது 20-வது அரை சதத்தை கடந்த கேப்​டன் கே.எல்​.​ராகுல் 43 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 66 ரன்​களும், ரவீந்​திர ஜடேஜா 27 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 24 ரன்​களும் சேர்த்​தனர். தென் ஆப்​பிரிக்க அணி தரப்​பில் மார்கோ யான்​சன் 2 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். நந்த்ரே பர்​கர், லுங்கி நிகிடி ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். ஒரு கட்​டத்​தில் இந்​திய அணி 390 ரன்​களுக்கு மேல் எளி​தாக சேர்க்கக்கூடும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால் கடைசி 10 ஓவர்​களில் இந்​திய அணி 74 ரன்​கள் மட்​டுமே சேர்த்​தது.

359 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணிக்கு எய்​டன் மார்க்​ரம் அதிரடி​யான தொடக்​கம் கொடுத்​தார். மற்றொரு தொடக்க வீர​ரான குயிண்​டன் டி காக் 8 ரன்​களில் அர்ஷ்தீப் சிங் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து களமிறங்​கிய தெம்பா பவுமா 48 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 46 ரன்​கள் எடுத்த நிலை​யில் பிரசித் கிருஷ்ணா பந்​தில், ஹர்​ஷித் ராணா​விடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். தனது 4-வது சதத்தை கடந்த எய்​டன் மார்க்​ரம் 98 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 10 பவுண்​டரி​களு​டன் 110 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஹர்​ஷித் ராணா பந்தை லாங் ஆன் திசை​யில் அடித்த போது ருது​ராஜ் கெய்க்வாட்டிடம் கேட்ச் ஆனது.

<div class="paragraphs"><p>ருதுராஜ் கெய்க்வாட்</p></div>

ருதுராஜ் கெய்க்வாட்

இதன் பின்​னர் களமிறங்​கிய டெவால்ட் பிரே​விஸ், மேத்யூ ப்ரீட்​ஸ்​கேவுடன் இணைந்து இந்​திய பந்​து​வீச்சை பதம் பார்த்​தார். இந்த ஜோடி​யின் அதிரடி​யால் தென் ஆப்​பிரிக்க அணி 40 ஓவர்​களில் 282 ரன்​கள் குவித்​தது. தனது முதல் அரைசதத்தை கடந்த டெவால் பிரே​விஸ் 34 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 54 ரன்​கள் எடுத்த நிலை​யில் குல்​தீப் யாதவ் பந்​தில் லாங் ஆன் திசை​யில் நின்ற ஜெய்​ஸ்​வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

4-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 64 பந்துகளில் 92 ரன்கள் குவித்து அசத்தியது. டெவால்ட் பிரேவிஸ் ஆட்டமிழந்த போது தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 57 பந்துகளில் 70 ரன்கள் தேவையாக இருந்தன. இதையடுத்து டோனி டி ஸோர்ஸி களமிறங்க, மேத்யூ ப்ரீட்ஸ்கே விரைவாக ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார். சீராக ரன்கள் குவித்து வந்த மேத்யூ ப்ரீட்ஸ்கே 64 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் சேர்த்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது ஸ்கோர் 43.5 ஓவர்களில் 317 ஆக இருந்தது. இதையடுத்து களமிறங்கிய மார்கோ யான்சன் 2 ரன்னில் அர்ஷ்தீப் சிங் பந்தில் வெளியேறினார்.

தென் ஆப்பிரிக்க அணி வெற்றியை நெருங்கிய நிலையில் டோனி டி ஸோர்ஸி 17 ரன்கள் எடுத்த நிலையில் தசைபிடிப்பு காரணமாக ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். இதன் பின்னர் கார்பின் போஷ் 15 பந்துகளில், 29 ரன்களும் கேசவ் மஹாராஜ் 14 பந்துகளில், 10 ரன்களும் சேர்க்க தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்துள்ளது. ராஞ்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 6-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.

2-வது அதிகபட்சம்: ராய்ப்பூர் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 358 ரன்கள் குவித்தது. ஒருநாள் போட்டியில் அந்த அணிக்கு எதிராக இந்தியா குவிக்கும் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னர் 2010-ல் குவாலியர் போட்டியில் இந்திய அணி 401 ரன்கள் குவித்திருந்தது.

`வேகம் காட்டிய ருது': தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட் தனது முதல் 50 ரன்களை 52 பந்துகளில் எடுத்திருந்தார். ஆனால் அடுத்த 50 ரன்களை 25 பந்துகளில் விளாசி சதம் எடுத்து அசத்தினார்.

20-வது முறையாக டாஸ் போச்சு: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் டாஸில் தோல்வி அடைந்தார். 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக 20-வது முறையாக டாஸை இழந்துள்ளது.

34 இடங்களில் சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராய்ப்பூரில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திரமான விராட் கோலி சதம் அடித்தார். வெவ்வெறு மைதானங்களில் அவர், அடிக்கும் 34-வது சதம் இதுவாகும். இந்த வகையிலான சாதனையில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரை சமன் செய்துள்ளார்.

இந்திய அணிக்கு பதிலடி கொடுத்த தென் ஆப்​பிரிக்கா: 2-வது ஒருநாள் போட்டி ஹைலைட்ஸ்
கொங்கில் ‘கிங்’காகப் போவது யார்? - அதிமுக, திமுக, தவெக அரசியல் வியூகங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in