

ஒரு டெஸ்ட் போட்டி இப்போதெல்லாம் 5 நாட்கள் வரை சென்று முடிவடைவது என்பது அரிதான ஒரு காலக்கட்டத்தில் 2025 இங்கிலாந்து தொடரில் ஓவல் டெஸ்ட் போட்டியின் அந்த 5-ம் நாள் திக் திக் தினத்தை மறக்க முடியுமா என்ன? அது இன்றைய தினமான ஆகஸ்ட் 4-ம் தேதிதான்.
2025-ஆம் ஆண்டு லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டி அப்படிப்பட்ட வரலாற்று தருணத்திற்குச் சாட்சியானது. பாஸ்பால் இங்கிலாந்தை அவர்கள் மண்ணில் சாய்ப்பது அவ்வளவு சுலபமல்ல, அதுவும் இந்த டெஸ்ட்டில் பும்ரா இல்லை என்பதும் விசேஷமானது, இதே தொடரில் இந்திய அணி பெற்ற 2 டெஸ்ட் வெற்றிகளிலும் பும்ரா இல்லை என்பதும் வெற்றிகளை விசேடமாக்கியது.
இந்நிலையில் ஐந்து நாட்கள் நீண்ட போராட்டத்தின் முடிவில், வெறும் 56 நிமிடங்களே நீடித்த கடைசி நாள் ரசிகர்களின் இதயத் துடிப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றது. இறுதி நாளில் இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 35 ரன்கள் மட்டுமே தேவை. கைவசம் நான்கு விக்கெட்டுகள் இருந்ததால், வெற்றி அவர்களுக்கே சொந்தம் என்று பெரும்பாலோர் நம்பினர்.
இங்கிலாந்து அணியும் 4-வது இன்னிங்சில் சேசிங் செய்து பெரிய இலக்குகளை வெற்றியாக்குவதில் கொஞ்சம் வெற்றி கண்டு வந்த காலக்கட்டம். இறுதி நாளில் இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 35 ரன்கள் மட்டுமே தேவை. கைவசம் நான்கு விக்கெட்டுகள் இருந்ததால், வெற்றி அவர்களுக்கே சொந்தம் என்று பெரும்பாலோர் நம்பினர். குறிப்பாக இங்கிலாந்தின் தனிச்சிறப்பு வாய்ந்த பார்மி ஆர்மியும் மைதானத்தில் ஆரவாரத்துடன் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால், இந்திய அணியின் மன உறுதி இன்னும் உடையவில்லை. புதிய நாளின் முதல் சில ஓவர்களிலேயே முகமது சிராஜ் தனது வேகமும் துல்லியமும் கலந்த நெருப்புக் கக்கும் பவுலிங்கைச் செய்தார். முதலில் அபாயகரமான ஜேமி ஸ்மித்தை வெளியேற்றிய சிராஜ், அடுத்த சில நிமிடங்களிலேயே ஜேமி ஓவர்டனையும் பெவிலியனுக்கு அனுப்பினார். இரண்டு விக்கெட்டுகள் விழுந்த அந்தக் கணத்தில் போட்டியே தலைகீழாக மாறியது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 224 ரன்களையே எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆனால் மீண்டும் ஆக்ரோஷமான கில் கேப்டன்சி சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப்பின் தீப்பொறி பறக்கும் ஸ்விங் பவுலிங் இங்கிலாந்து அணி எதிர்பார்ப்பை உடைத்து பெரிய முன்னிலை பெற முடியாமல் தடுத்தது. இத்தனைக்கும் இங்கிலாந்து 12 ஓவர்களில் 92/1 என்று அதிரடி தொடக்கம் கண்டது. அதிலிருந்து 247 ரன்களுக்கு ஆல் அவுட். சிராஜ் 4 விக்கெட், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்.
இந்தியா 2வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் அட்டகாசமான 118 ரன்கள், நைட் வாட்ச்மேன் ஆகாஷ் தீப் 66, ஜடேஜா 53, வாஷிங்டன் சுந்தர் 4 பெரிய சிக்சர்களுடன் 46 பந்துகளில் 53 என்று விளாச 396 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. இங்கிலாந்துக்கு இலக்கு 374.
நான்காவது நாளில் இங்கிலாந்தின் 'பாஸ்பால்' அணுகுமுறை மீண்டும் மைதானத்தை அதிரவைத்தது. ஹாரி ப்ரூக் வெறும் 91 பந்துகளில் மின்னல் வேக சதம் அடித்து இந்திய ரசிகர்களின் நம்பிக்கையை சிதைக்க முயன்றார். அவருக்கு உறுதுணையாக ஜோ ரூட்டும் அபார சதம் விளாசினார். இருவரின் கூட்டணி இங்கிலாந்தை வெற்றியின் வாசலுக்கு அழைத்துச் சென்றது. புரூக்கிற்கு சிராஜ் கையில் வந்த கேட்சை விட்டு அது சிக்சராக மாறியதும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகு அதன் கணிக்க முடியாத திருப்பங்களில்தான் இருக்கிறது. நான்காவது நாள் முடிவதற்கு முன் இந்தியப் பந்துவீச்சாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தினர். முதலில் ஹாரி ப்ரூக்கை வெளியேற்றினர். அதன் பின்னர் ஜோ ரூட்டும் விக்கெட்டை இழந்தார். அந்த இரண்டு விக்கெட்டுகள் இந்தியாவுக்கு புதிய உயிர் ஊட்டின. போட்டி மீண்டும் இரு அணிகளுக்கும் சமமாக மாறியது.
இறுதி நாளில் மூன்று ஓவர்கள் மட்டுமே கடந்திருந்தன. இந்தியாவுக்கு இன்னும் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே தேவை. அப்போது பிரசித் கிருஷ்ணா ஜோஷ் டங் விக்கெட்டை வீழ்த்தினார். இங்கிலாந்தின் கடைசி நம்பிக்கையாக களமிறங்கியது கிறிஸ் வோக்ஸ். தோள்பட்டை இடம்பெயர்ந்ததால் கையில் ஸ்லிங் கட்டியபடியே அவர் பேட்டிங் செய்ய வந்தார். வலியைப் பொருட்படுத்தாமல் அணிக்காக போராட வந்த அவரது காட்சி மைதானத்தில் இருந்த அனைவரின் மரியாதையையும் பெற்றது.
இங்கிலாந்துக்கு இன்னும் 17 ரன்கள் தேவை. மறுமுனையில் இருந்த கஸ் அட்கின்சன் சிராஜின் பந்தை கவ் கார்னர் திசையில் தூக்கி அடித்தார். பந்தை பிடிக்க பின்னோக்கி ஓடிய ஆகாஷ் தீப் முழு முயற்சியுடன் கையை நீட்டினாலும், அது எல்லைக்கோட்டை தாண்டி சிக்ஸராக மாறியது. மைதானம் முழுவதும் இங்கிலாந்து ரசிகர்களின் ஆரவாரம் எதிரொலித்தது.
ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. இன்னும் ஏழு ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், முகமது சிராஜ் தனது வாழ்க்கையின் மிக முக்கியமான பந்துகளில் ஒன்றை வீசினார். வேகமாக உள்ளே நுழைந்த அந்தப் பந்து கஸ் அட்கின்சனின் ஆஃப் ஸ்டம்பை சிதறடித்தது. ஸ்டம்ப்கள் வானில் பறந்த அந்தக் கணத்தில் ஓவல் மைதானம் இந்திய வீரர்களின் கொண்டாட்டத்தில் மூழ்கியது.
அந்த ஒரு பந்து இந்தியாவுக்கு வெற்றியை மட்டுமல்ல, தொடரை சமன் செய்த பெருமையையும் அளித்தது. ஓவலில் கிடைத்த அந்த வெற்றி இந்தியாவின் டெஸ்ட் வரலாற்றில் மிகக் குறைந்த வித்தியாசத்தில் பெற்ற மறக்க முடியாத வெற்றியாகப் பதிவானது. 2025-ஆம் ஆண்டின் ஓவல் டெஸ்ட், கடைசி நொடி வரை பரபரப்பை இழக்காத, கிரிக்கெட் ரசிகர்கள் தலைமுறைகள் கடந்தும் நினைவுகூரும் ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டியாக என்றேன்றும் மனதில் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.