

லக்னோ: ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், ஜாஸ் பட்லர் ஆகியோர் அரை சதம் விளாசி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
இந்த ஆட்டம் லக்னோவிலுள்ள அடல்பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய எய்ட்ன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடத் தொடங்கினர். ஆனால் இந்த அதிரடி நீடிக்கவில்லை. மிட்செல் மார்ஷ் 4 பந்துகளில் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
எய்டன் மார்க்ரம் 21 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 30 ரன்கள் சேர்த்து வீழ்ந்தார். அதன் பின்னர் வந்த வீரர்களில் யாரும் 20 ரன்களைத் தாண்டவில்லை. கேப்டன் ரிஷப் பந்த் 11 பந்துகளில் 18 ரன்களும், ஆயுஷ் பதோனி 9, நிக்கோலஸ் பூரன் 19, அப்துல் சமத் 18, முகுல் சவுத்ரி 18, ஜார்ஜ் லிண்டே 16 ரன்கள் சேர்த்தனர். முகமது ஷமி 12 ரன்களும், அவேஷ் கான் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
குஜராத் அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா அபாரமாக பந்துவீசி 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். அசோக் சர்மா 2 விக்கெட்களையும், முகமது சிராஜ், காகிசோ ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடத் தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரரான சாய் சுதர்ஷன் 14 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் சேர்த்த நிலையில் திக்வேஷ் சிங் ராதி பந்துவீச்சில் வீழ்ந்தார். ஆனால் 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஷுப்மன் கில்லும், ஜாஸ் பட்லரும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 86 ரன்கள் குவித்தது. ஷுப்மன் கில் 40 பந்துகளில் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 56 ரன்கள் குவித்து பிரின்ஸ் யாதவ் பந்தில் வீழ்ந்தார். ஜாஸ் பட்லர் 37 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 60 ரன்களை விளாசினார்.
இறுதியில் 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்து குஜராத் வெற்றி கண்டது. வாஷிங்டன் சுந்தர் 13 பந்துகளில் 21 ரன்களும், ராகுல் டொவாட்டியா 8 பந்துகளில் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களைச் சாய்த்த பிரசித் கிருஷ்ணா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
லக்னோ அணி தரப்பில் முகமது ஷமி, பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் சிங் ராதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். குஜராத் அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
அதேபோல் லக்னோ அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணியும் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளை கையகப்படுத்தியுள்ளது. குஜராத் அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 17-ம் தேதி கொல்கத்தா அணியைச் சந்திக்கவுள்ளது. லக்னோ அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 15-ம் தேதி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
கோலி சாதனையை முறியடித்தார் கில்
ஐபிஎல் போட்டிகளில் குறைந்த வயதில் 4 ஆயிரம் ரன்கள் குவித்தவர் என்ற விராட் கோலியின் சாதனையை குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் முறியடித்தார். 2016-ல் விராட் கோலியின் வயது 27 ஆண்டு 195 நாட்க ளாக இருந்தபோது ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்திருந்தார்.
இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை ஷுப்மன் கில் கடந்தார். ஷுப்மன் கில் 26 ஆண்டு 216 நாட்களிலேயே இந்த சாதனையைச் செய்து விராட்டின் சாதனையை முறியடித்துள்ளார். ஷுப்மன் கில் தற்போது 118 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 4,031 ரன்களைக் குவித்துள்ளார்.