

கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் குண்டு எறிதலில் (எஃப்57) தங்கம் வென்றார் இந்தியாவின் ஷர்மிளா தன்கர். இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய பாரா தடகள வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 10 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் அடங்கும். இப்போது இந்தியா பதக்கப் பட்டியலில் எட்டாம் இடத்தில் உள்ளது.
இதில் பாரா தடகள குண்டு எறிதல் (எஃப்57) மகளிர் பிரிவில் ஷர்மிளா பங்கேற்றார். இறுதிச் சுற்றில் 9.81 மீட்டர் தூரம் குண்டை அவர் எறிந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
ஷர்மிளா கடந்து வந்த பாதை
ஹரியானாவை சேர்ந்த ஷர்மிளா, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர். சிறு வயதில் போலியோ பாதிப்புக்கு ஆளானார். பத்தாம் வகுப்பு முடித்ததும் அவருக்கு திருமணம் நடந்துள்ளது. இரண்டு பெண் குழந்தைகள். இருப்பினும் மதுவுக்கு அடிமையான கணவர் அன்றாடம் அவரை தாக்கி துன்புறுத்தி உள்ளார். திருமண வாழ்க்கை கசந்த காரணத்தால் மீண்டும் தாய் வீட்டுக்கு அவர் திரும்பினார்.
கிடைக்கும் வேலையை செய்து வந்த நிலையில், பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பாத அவர், அஜித் சிங் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். அவர்தான் பாரா தடகள விளையாட்டு குறித்து ஷர்மிளாவிடம் தெரிவித்துள்ளார். சிறு வயது முதலே ஷர்மிளாவுக்கு விளையாட்டு மீது ஆர்வம் இருந்தாலும் மனதுக்குள் ஏனோ சற்று தயக்கம். இருப்பினும் அதற்கான முயற்சியிலும், பயிற்சியிலும் 2018-ல் இறங்கினார். இப்போது காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்றுள்ளார்.
“முதல் திருமணம் முறிந்த நிலையில் வீடு திரும்பிய என்னை பார்த்து பலரும் வருந்தினார்கள். எனக்கும் அப்படி இருந்தது. கணவரின் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், வாழ்க்கையே வேண்டாம் என்று கருதிய பெண், இன்று சர்வதேச அளவிலான விளையாட்டில் தங்கம் வென்றுள்ளார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. விளையாட்டு எனக்கு இரண்டாவது முறையாக வாழ்க்கை கொடுத்துள்ளது. இதை நான் வாழ விரும்புகிறேன்” என்று ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
தாயின் வழியில் ஷர்மிளாவின் மகள்கள் அனுஜ் மற்றும் லட்சுமி என இருவரும் இப்போது தடகள விளையாட்டில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஷர்மிளாவின் பயிற்சிக்காக தங்களது வீட்டை விற்று விட்டு, அந்த தொகையை கொண்டு பயிற்சிக்கு ஆகும் செலவுகளை அவரது கணவர் அஜித் கவனித்துள்ளார். இப்போது வயதாகி வீட்டில் அவர்கள் வசித்து வருகின்றனர்.
ஷர்மிளா பதக்கம் வென்ற அதே பிரிவில் இந்தியாவின் ஷுல்பா கே.ஷைலா மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார். நைஜீரிய வீராங்கனை செய்த ஃபவுல் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனால் ஷில்பா மூன்றாம் இடத்துக்கு முன்னேறினார். இதன் மூலம் பாரா தடகளத்தில் ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்களை இந்தியா முதல் முறை வென்றது.