

கொல்கத்தா: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் நேற்று மோதியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதலில் பேட் செய்தது. கேப்டன் ஷாய் ஹோப்புடன், ராஸ்டன் சேஸ் தொடக்க வீரராக களமிறங்கினார். அர்ஷ்தீப் சிங் வீசிய 3-வது ஓவரில் ரன் அவுட் ஆவதில் இருந்து தப்பித்த ராஸ்டன் சேஸ் தொடர்ச்சியாக 2 பவுண்டரிகளை விரட்டி அசத்தினார்.
ஜஸ்பிரீத் பும்ரா வீசிய 5-வது ஓவரின் 5-வது பந்தை ராஸ்டன் சேஸ் ஸ்கூப் ஷாட்டில் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தை அவர், கவர் திசையில் தூக்கி அடித்த போது எளிதான கேட்ச்சை அபிஷேக் சர்மா தவறவிட்டார். பவர்பிளேவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் சேர்த்தது.
சீராக ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை வருண் சக்ரவர்த்தி பிரித்தார். ஷாய் ஹோப் 33 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்தில் போல்டானார். முதல் விக்கெட்டுக்கு ஷாய் ஹோப், ராஸ்டன் சேஸ் ஜோடி 8.5 ஓவர்களில் 68 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய ஷிம்ரன் ஹெட்மயர் மட்டையை சுழற்றினார்.
ஹர்திக் பாண்டியா வீசிய 10-வது ஓவரில் ஷிம்ரன் ஹட்மயர் சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டார். தொடர்ந்து வருண் சக்ரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியை விரட்ட இந்த ஓவரில் 17 ரன்கள் குவிக்கப்பட்டன. 12-வது ஓவரை வீசிய ஜஸ்பிரீத் பும்ரா 2 விக்கெட்களை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார்.
அதிரடியாக விளையாடிய ஷிம்ரன் ஹெட்மயர் 12 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து ராஸ்டன் சேஸ் 25 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் விளாசிய நிலையில் பும்ரா பந்தில் கவர் திசையில் நின்ற சூர்யகுமார் யாதவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
12 ஓவர்களின் முடிவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 103 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஷெர்பேன் ரூதர்போர்டு 9 பந்துகளில், 14 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இதன் பின்னர் ரோவ்மன் பவல், ஜேசன் ஹோல்டர் ஜோடி தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டது.
ஹர்திக் பாண்டியா வீசிய 15-வது ஓவரின் கடைசி பந்தை ஜேசன் ஹோல்டர் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். அர்ஷ்தீப் சிங் வீசிய 16-வது ஓவரில் ரோவ்மன் பவல் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை விரட்ட இந்த ஓவரில் மட்டும் 24 ரன்கள் குவிக்கப்பட்டன.
வருண் சக்ரவர்த்தி வீசிய 17-வது ஓவரில் ஜேசன் ஹோல்டர் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியை விரட்ட 14 ரன்கள் சேர்க்கப்பட்டன. பும்ரா வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் சேர்க்கப்பட்டன. அர்ஷ்தீப் சிங் வீசிய அடுத்த ஓவரின் 3-வது பந்தில் ரோவ்மன் பவல் டீப் மிட்விக்கெட் திசையில் கொடுத்த கேட்சை அபிஷேக் சர்மா தவறவிட்டார்.
இந்த ஓவரில் அர்ஷ்தீப் சிங் 6 ரன்களை மட்டுமே வழங்கினார். ஜஸ்பிரீத் பும்ரா வீசிய கடைசி ஓவரில் ஜேசன் ஹோல்டர் ஒரு சிக்ஸரையும், ரோவ்மன் பவல் ஒரு பவுண்டரியையும் விரட்ட 14 ரன்கள் சேர்க்கப்பட்டன. 20 ஓவர்களின் முடிவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது.
ரோவ்மன் பவல் 19 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் ஜேசன் ஹோல்டர் 22 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 70 ரன்களை குவித்து மிரட்டியது. இந்திய அணி சார்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களை வீசி 36 ரன்களை வழங்கி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்களை வீசி 40 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும், ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களை வீசி 40 ரன்களை வழங்கி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். அர்ஷ்தீப் சிங் வீசிய 4 ஓவர்களில் 43 ரன்களும், அக்சர் படேல் வீசிய 4 ஓவர்களில் 35 ரன்களும் விளாசப்பட்டன.
இதையடுத்து 196 ரன்கள் இலக்குடன் இந்திய அணி பேட் செய்தது. அபிஷேக் சர்மா 11 பந்துகளில், 2 பவுண்டரிகளுடுன் 10 ரன்கள் எடுத்த நிலையில் அகீல் ஹோசைன் பந்தை சிக்ஸருக்கு விளாச முயன்ற போது லெக் திசையில் ஷிம்ரன் ஹெட்மயரிடம் கேட்ச் ஆனது.
இதையடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 6 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஜேசன் ஹோல்டர் வீசிய பவுன்சரை டீப் ஸ்கொயர் லெக் திசையில் விளாசிய போது எல்லைக் கோட்டுக்கு அருகே ஷிம்ரன் ஹெட்மயரிடம் கேட்ச் ஆனது.
4.3 ஓவர்களில் 41 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சனுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். பவர்பிளேவில் இந்திய அணி 53 ரன்கள் சேர்த்தது. ஜேசன் ஹோல்டர் வீசிய 7-வது ஓவரில் சஞ்சு சாம்சன் பவுண்டரியும் சூர்யகுமார் யாதவ் சிக்ஸரும் விளாசினர்.
இந்த ஓவரில் 14 ரன்கள் சேர்க்கப்பட்டன. சீராக ரன்கள் சேர்த்த சஞ்சு சாம்சன் 26 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். நிதானமாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 16 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஷமர் ஜோசப் பந்தை டீப் பாயிண்ட் திசையில் விளாசிய போது ஷேர்பேன் ரூதர்போர்டிடம் கேட்ச் ஆனது.
அப்போது ஸ்கோர் 10.2 ஓவர்களில் 99 ஆக இருந்தது. 3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஜோடி 58 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து திலக் வர்மா களமிறங்கினார். கடைசி 8 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 92 ரன்கள் தேவையாக இருந்தன.
ஷமர் ஜோசப் வீசிய 13-வது ஓவரின் முதல் பந்தில் சஞ்சு சாம்சன் பவுண்டரி விரட்ட திலக் வர்மா தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் அடித்து அசத்தினார். இந்த ஓவரில் 17 ரன்கள் சேர்க்கப்பட்டன. ராஸ்டன் சேஸ் வீசிய 14-வது ஓவரில் சஞ்சு சாம்சன் பவுண்டரி அடிக்க கடைசி பந்தை திலக் வர்மா சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இதன் வாயிலாக இந்த ஓவரில் 15 ரன்கள் சேர்க்கப்பட்டன.
இந்த கூட்டணியின் அதிரடியால் கடைசி 6 ஓவர்களில் வெற்றிக்கு 60 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. ஜேசன் ஹோல்டர் வீசிய 15-வது ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய திலக் வர்மா அடுத்த பந்தை மிட் ஆஃப் திசையில் அடித்த போது ஷிம்ரன் ஹெட்மயரின் அற்புதமான கேட்ச் காரணமாக ஆட்டமிழந்தார். 15 பந்துகளை சந்தித்த திலக் வர்மா ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். இதே ஓவரின் கடைசி பந்தை சஞ்சு சாம்சன் பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது- ஷமர் ஜோசப் வீசிய 16-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தலா ஒரு பவுண்டரி அடிக்க 14 ரன்கள் சேர்க்கப்பட்டது.
கடைசி 4 ஓவர்களில் 36 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோமாரியோ ஷெப்பர்டு வீசிய 17-வது ஓவரின் 2-வது பந்தை ஹர்திக் பாண்டியா கவர் திசையில் கொடுத்த கேட்ச்சை ஜேசன் ஹோல்டர் தவறவிட்டார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் சேர்க்கப்பட்டன. 18 பந்துகளில் 25 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜேசன் ஹோல்டர் வீசிய 18-வது ஓவரில் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
கடைசி 2 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்தன. முதல் பந்தை வீணடித்த ஹர்திக் பாண்டியா அடுத்த பந்தில் எக்ஸ்டிரா கவர் திசையில் நின்ற ஜேசன் ஹோல்டரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு அதிகமானது. 14 பந்துகளை சந்தித்த ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஷிவம் துபே சந்தித்த முதல் பந்தில் பவுண்டரி அடித்தார். 4-வது பந்தில் ரன் சேர்க்கப்படாத நிலையில் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஷிவம் துபே, கடைசி பந்தில் 2 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்த ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வந்தது. ரோமாரியோ ஷெப்பர்டு வீசிய கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் முதல் பந்தை சஞ்சு சாம்சன் லெக் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.
அடுத்த பந்தை மிட் ஆன் திசையில் சஞ்சு சாம்சன் பவுண்டரி விளாச இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் 50 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 97 ரன்களும், ஷிவம் துபே 4 பந்துகளில், 8 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி குரூப் 1-ல் 4 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது. வரும் 5-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 2-வது அரை இறுதி ஆடத்தில் இந்திய அணி, இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
சிக்ஸர்கள் வேட்டை
டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு பதிப்பில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை மேற்கு இந்தியத் தீவுகளின் ஷிம்ரன் ஹெட்மயர் படைத்தார். இந்தியாவுக்கு எதிராக நேற்று அவர், 2 சிக்ஸர்கள் அடித்தார். இதன் மூலம் அவர், நடப்பு தொடரில் 19 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். இந்த வகையில் பாகிஸ்தான் அணியின் சாஹிப்சதா பர்ஹான் நடப்பு தொடரில் 18 சிக்ஸர்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. இதை முறியடித்து தற்போது புதிய சாதனை படைத்துள்ளார் ஷிம்ரன் ஹெட்மயர்.
ரன் அவுட்டை தவறவிட்ட வருண்
அர்ஷ்தீப் சிங் வீசிய 3-வது ஓவரின் 2-வது பந்தில் ராஸ்டன் சேஸை ரன் அவுட் செய்ய கிடைத்த எளிதான வாய்ப்பை வருண் சக்ரவர்த்தி கோட்டைவிட்டார். ராஸ்டன் சேஸ் கவர் திசையில் அடித்த பந்து வருண் சக்ரவர்த்தியிடம் சென்றது. அதற்குள் ராஸ்டன் சேஸ் ரன் ஓடுவதற்காக பாதி தூரம் வந்துவிட்டார். மறுமுனையில் ஷாய் ஹோப் ரன் ஓட ஆயத்தமான நிலையில் நின்றுவிட்டார்.
இதை சுதாரிக்கத் தவறிய வருண் சக்ரவர்த்தி பந்தை விக்கெட் கீப்பருக்கு த்ரோ செய்யாமல் நான்-ஸ்டிரைக்கர் திசையை நோக்கி எறிந்தார். ஆனால் அது ஷாய் ஹோப் மீது பட்டு விலகிச் சென்றது. ஒரு ரன்னில் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்த ராஸ்டன் சேஸ் 25 பந்துகளில் 40 ரன்கள் விளாசி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு பலம் சேர்த்தார்.