

சஞ்சு சாம்சன் ஒரு போதும் அடுத்த தோனியாக வேண்டிய கட்டாயமே இல்லை. சஞ்சு சஞ்சுவாகவே இருந்தால் போதும் என்று கவுதம் கம்பீர் ஒருமுறை சசி தரூரிடம் கூறியது தற்போது செய்தியாகியுள்ளது.
பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு சசி தரூர் அளித்த பேட்டியில் கம்பீருடன் நடந்த உரையாடலை நினைவுகூர்ந்தார். சாம்சன் கிளப் கிரிக்கெட் வீரராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்தே அவருக்கு ஆதரவளித்து வரும் தரூர், அந்த வீரரின் சாதனைகளைக் கண்டு மிகுந்த பெருமிதம் கொள்வதாகக் கூறினார்.
சசி தரூர் கூறியதாவது:
“நான் சஞ்சு சாம்சனை அவருக்கு 14 வயதிருக்கும் போதே சந்தித்தேன். அவர் ஓர் இளம் கிளப் கிரிக்கெட்டராக இருந்தார், பெரிய புன்னகையுடன் கூடிய சிறிய உருவம் அவருக்கு. பார்ப்பதற்கு ஒல்லி சரீரம் போல தெரிந்தாலும் உண்மையில் அவர் நல்ல வலுவுள்ளவர். மிகப்பெரிய திறமை. அப்போதே விக்கெட் கீப்பிங் பேட்டிங் இரண்டிலும் சிறப்பாகத் திகழ்ந்தார்.
அப்போது அவரை ஊக்கப்படுத்துவதற்காக நீதான் அடுத்த தோனி சாம்சன் என்று நான் உற்சாகப்படுத்தியுள்ளேன். பிறகு சில ஆண்டுகள் கழித்து நான் இப்படிக் கூறியதை என் நண்பர் கவுதம் கம்பீரிடம் பகிர்ந்தேன். உடனே கம்பீர் மறுத்து, ‘இல்லை... அவர் அடுத்த தோனியாக வேண்டியத் தேவையேயில்லை. அவர் சஞ்சு சாம்சனாக இருந்தாலே போதும்.’ என்றார். இன்று அதுதான் நடந்துள்ளது. ஒன் அண்ட் தி ஒன்லி சஞ்சு சாம்சன்.
டி20 உலகக்கோப்பையில் மே.இ.தீவுகளுக்கு எதிரானப் போட்டியின் போது சஞ்சுவின் கண்களைப் பார்த்த போதே சொன்னேன், சஞ்சு இன்று அவுட் ஆகப்போவதில்லை என்று, இதை பிற்பாடு சஞ்சுவிடமே சொன்னேன். அவர் முகத்தில் அன்று நிலவிய சாந்தம் நிச்சயம் உறுதிப்பாட்டின் வெளிப்பாடு 97 நாட் அவுட்டாக வெற்றிபெறச் செய்தார்.
கடைசி 2 இன்னிங்ஸ்களிலும் கூட சஞ்சு சுயநலமின்றி ஆடினார். 89 ரன்களில் இருந்த போது 11 ரன்களைத் தட்டித் தட்டி எடுத்து சதம் எடுத்திருக்கலாம், ஆனால் அப்படி ஆடவில்லை. ஏனெனில் அணிக்கு ரன்கள் தேவை, அதனால் பெரிய ஷாட்டை ஆடினார். ஆட்டமிழந்தார்.
சுயநலமின்மை, திறமை, அர்ப்பணிப்பு இவைகளின் உருவம்தான் சஞ்சு சாம்சன். ரன்களைக் குவித்தும் அதிர்ஷ்டம் அவருக்கு இல்லை, ஒருநாள் போட்டி ஒன்றில் சதம் எடுத்த பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் ஒருநாள் டி20 இரண்டிலும் பெரிய தொடர்களில் இதே போன்று ஆடுவதைப் பார்க்க விரும்புகிறேன்.”
இவ்வாறு கூறினார் சசி தரூர்.