

கொல்கத்தா: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் இலக்கைக்கூட எட்ட முடியாமல் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த ஆட்டத்தில் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்ட ஆடுகளத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக திணறினார்கள். இதனால் இந்திய அணியின் ஆட்ட அணுகுமுறையும், கவுதம் கம்பீரின் பயிற்சி திட்டங்களும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
போட்டியை 3 நாட்களில் முடிக்கும் வகையில் ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி குவாஹாட்டியில் தொடங்குகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் நேற்று 3 மணி நேரம் தீவிர பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். சாய் சுதர்சன், துருவ் ஜூரெல் ஆகியோர் கவுதம் கம்பீர் முன்னிலையில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக பேட்டிங் பயிற்சி செய்தனர்.
அதுவும் முன்னங்காலில் கால்காப்பு அணியாமல் பேட்டிங் செய்தனர். சுழன்று வரும் பந்துகளுக்கு எதிராக தற்காப்பு ஆட்டம் மேற்கொள்ளும் போது கால்காப்பில் பந்தை வாங்காமல் இருப்பதற்காக இந்த முறை கையாளப்பட்டது. மேலும் இடது கை பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சாளர்களின் கையைப் புரிந்துகொண்டு கால்களை நகர்த்தி விளையாடுவதில் உள்ள சிரமங்களை சரி செய்வதற்கும் வழிகள் தேடப்பட்டன.
சாய் சுதர்சன், முதல் டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்படவில்லை. குவாஹாட்டி போட்டியிலும் அவருக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. எனினும் கழுத்து பகுதியில் காயம் அடைந்துள்ள ஷுப்மன் கில் களமிறங்க முடியாத நிலை உருவானால் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
சுழற்பந்து வீச்சை தொடர்ந்து வேகப்பந்து வீச்சுக்கு எதிராகவும் சாய் சுதர்சன் பேட்டிங் செய்தார். ஆகாஷ் தீப் வீசிய பந்துகளில் பல முறை எட்ஜ் ஆனது. மேலும் வலை பயிற்சி பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் சாய் சுதர்சன் தடுமாறினார். இதைத் தொடர்ந்து கவுதம் கம்பீரும், பேட்டிங் பயிற்சியாளரான சிதான்ஷு கோட்டக்கும் சாய் சுதர்சனுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
அதேவேளையில் துருவ் ஜூரெல், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களில் அதிக கவனம் செலுத்தி பயிற்சியில் ஈடுபட்டார். அவருடன் ரவீந்திர ஜடேஜாவும் நீண்ட நேரம் பேட்டிங் செய்தார். இது ஒருபுறம் இருக்க நித்திஷ் குமார் ரெட்டி இந்தியா ‘ஏ’ அணியில் இருந்து விலகி, கொல்கத்தாவில் பயிற்சி பெற்று வரும் இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.