

முகமது ஷமி, சிராஜ், ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் காயமடைந்தால் உள்நாட்டு கிரிக்கெட் அணியில் ஆடி காயத்திலிருந்து மீண்டு விட்டதாக ஒரு கடினமான நிகழ்முறையில் நிரூபித்து உள்ளே வர வேண்டும். சில வீரர்களுக்கு அந்த பாக்கியமும் கிடையாது.
ஆனால் கம்பீரின் ‘செல்லப்பிள்ளை’ ஹர்ஷித் ராணா மட்டும் காயத்திலிருந்து மீண்டு உடல்தகுதியை உள்நாட்டு கிரிக்கெட் ஆடி நிரூபிக்க வேண்டிய தேவையின்றி இந்திய அணிக்குள் பிரவேசிக்க முடிகிறது என்றால் இந்திய அணியில் கம்பீர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது கண்கூடாகத் தெரிகிறது.
அயர்லாந்து, இங்கிலாந்திடம் தோல்வி என்றால் பரவாயில்லை. போட்டியிட்டு தோல்வி என்றால் நல்லது. ஆனால் முழுமுதல் சரணாகதி தோல்வி என்றால் அதற்குக் காரணம் இந்த சிஸ்டத்திலேயே பிரச்சினை உள்ளது என்றே பொருள். சிஸ்டம் என்றால் அணித்தேர்வு நிகழ்முறை, வீரர்களின் ஃபார்ம் குறித்த ஆய்வு உள்ளிட்டவையே சிஸ்டம் என்று குறிப்பிடப்படுகிறது. மாறாக இங்கு நெப்போட்டிஸம் தான் அணித்தேர்வுக்கு முக்கிய காரணியாக உள்ளது என்று பலரும் பிசிசிஐ-யை விமர்சித்து வருகின்றனர்.
வழக்கம் போல் பிசிசிஐ-யும் தோல்விகளை நார்மலைஸ் செய்து ‘ஒன்றும் பிரச்சினையில்லை’, ‘மாற்றத்தில் இருக்கிறது அணி’, ‘ஆய்வு நடத்துகிறோம்’ என்றெல்லாம் திசைத் திருப்பி வருகிறது. இந்தப் பிரச்சினைகளில் குறிப்பாக ஹர்ஷித் ராணா, திலக் வர்மா, ஷிவம் துபே அணியில் நீடிப்பது எப்படி என்ற கேள்விகள் தலைதூக்கியுள்ளன.
இந்தக் கேள்விக்கணைகள் வரிசையில் கணைகளை சமீபமாகத் தொடுத்திருப்பவர் தமிழத்தை சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் சடகோபன் ரமேஷ்:
"முழுமையாக உடல்தகுதியை நிரூபிக்காமல், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஹர்ஷித் ராணா எப்படி நேரடியாக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்? முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக குணமடையவில்லை என்றால், அதனால் அடுத்ததாக ஹாம்ஸ்ட்ரிங் அல்லது குவாட் தசையில் காயம் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதுதான் அவருக்கும் நடந்துள்ளது. அவர் 100 சதவீத உடல்தகுதியுடன் இந்திய அணிக்கு திரும்பவில்லை என்பது தெளிவாகிறது.
சில வீரர்களுக்கு ஒரு விதமான அளவுகோலும், மற்றவர்களுக்கு வேறு விதமான அளவுகோலும் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கே இது சான்று. இந்தப் பிரச்சினையை இந்திய அணி சரிசெய்தால்தான் மீண்டும் தொடர்ந்து நல்ல முடிவுகளைப் பெற முடியும்.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கு அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதும், இந்தக் காயம் உறுதியாகும் முன்பே அணி அறிவிக்கப்பட்டதும், தொடர்ந்து நடைபெறும் தொடர்களில் அவர் விளையாட முடியாது என்பதை அறிந்தே அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது என்பதைத் தெளிவு படுத்துகிறது. இது ஹர்ஷித் ராணாவின் திறமையைப் பற்றிய விமர்சனம் அல்ல.
இங்கிலாந்து அணியில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இருவர் மட்டுமே இருந்தபோதிலும், வருண் சக்கரவர்த்தி காயமடைந்ததால் இந்தியா கட்டாயமாக வாஷிங்டன் சுந்தரை களமிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதே நேரத்தில், ரவி பிஷ்னாய் மீது இந்திய அணிக்கு முழு நம்பிக்கை இல்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.
நிச்சயமாக நீங்கள் செய்த தவறுகளிலிருந்து விரைவாகப் பாடம் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். அப்போதுதான் அதன் பலன் அணிக்கும் கிடைக்கும். அணியில் விரைவாகக் கற்றுக்கொள்ளும் வீரர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவர்கள் தங்களைத் தாங்களே மதிப்பீடு செய்து, அடுத்தப் போட்டியில் இன்னும் வலிமையாக மீண்டு வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.