

புதுடெல்லி: 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததால் கிரிக்கெட்டை விட்டுவிட நினைத்தேன் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
2023-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 9 வெற்றிகளை குவித்து இறுதிப் போட்டியில் நுழைந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது.
டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி சதம் அடித்து இந்திய அணியின் பட்டம் வெல்லும் கனவை தகர்த்தார். இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேனும் முன்னாள் கேப்டனுமான ரோஹித் சர்மா, 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் தோல்வியால் அடைந்த வேதனையை பகிர்ந்துகொண்டார்.
அவர், கூறியதாவது: கடந்த 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு மிகுந்த கவலையாக இருந்தது. இனிமேல் கிரிக்கெட்டே விளையாட வேண்டாம் என நினைத்தேன். ஏனெனில், அந்த உலகக் கோப்பைத் தொடர் என்னிடம் இருந்த அனைத்தையும் எடுத்துக்கொண்டது. என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லாததைப் போன்று உணர்ந்தேன்.
அந்த உணர்விலிருந்து வெளிவர எனக்கு சிறிது காலம் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் எனக்கு மிகவும் பிடித்த, மிகவும் நேசிக்கும் கிரிக்கெட்டை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது என்பதை எனக்குள் நானே நினைவு படுத்திக்கொண்டே இருந்தேன். மெதுவாக இழந்த ஆற்றலை மீண்டும் பெற்று கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் அணியில் உள்ள அனைவரும் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தோம். என்ன நடந்தது என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. தனிப்பட்ட முறையில் அது எனக்கு மிகவும் கடினமான நேரம்.
ஏனெனில், 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடருக்காக என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்தேன். இது வெறும் 2-3 மாதங்களுக்கு முன்பாக நிகழ்ந்தது இல்லை. கடந்த 2022-ம் ஆண்டு நான் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டதிலிருந்து இந்த உலகக் கோப்பைத் தொடருக்காக தயாரானேன்.
உலகக் கோப்பையை வெல்வதே என்னுடைய இலக்காக இருந்தது. அது டி20 உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, 50 ஓவர் உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி. அது நடக்காதபோது, நான் முற்றிலும் நொறுங்கிப் போனேன். என் உடலில் எந்த சக்தியும் மிச்சமில்லை. அதில் இருந்து என்னை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர எனக்கு இரண்டு மாதங்கள் ஆனது.
ஒரு விஷயத்தில் அதிகமாக முதலீடு செய்து, அதற்கான பலன் கிடைக்கவில்லை என்றால், மிகுந்த ஏமாற்றமடைவது இயல்பானது. எனக்கும் அதுதான் நடந்தது. ஆனால் வாழ்க்கை இதோடு முடிவடையாது என்பதையும் நான் அறிந்திருந்தேன். ஏமாற்றத்தை எப்படி சமாளிப்பது, அதில் இருந்து மீண்டு வருவது எப்படி, புதிதாகத் தொடங்குவது எப்படி என்பது எனக்கு பெரிய பாடமாக இருந்தது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஏதோ நிகழப் போகிறது என்பதை அறிந்தேன், அதனால் நான் என் முழு கவனத்தையும் அதில் செலுத்தினேன். இப்போது இதனைக் கூறுவதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது. ஆனால், அந்த நேரத்தில் அது மிகவும் கடினமாக இருந்தது. இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.
2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருந்தது. இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பின்னரே சர்வதேச டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றார்.
தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார். தற்போது 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.