இந்திய அணியின் வெற்றிப் பயணம் தொடரும்: ரோஹித் சர்மா நம்பிக்கை
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிப் பயணம் தொடரும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த 8-ம் தேதி நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி, நியூஸிலாந்தை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. 3-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்திருந்தது.
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் 3-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வென்று அசத்தியது. இந்நிலையில் இந்திய அணி இன்னும் பல உலக கோப்பைகளை வெல்லும் என்றும், அணியின் வெற்றி வேட்டை தொடரும் என்றும் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது: ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய தலைமையிலான டி20 அணி 2024-ல் வென்றதைப் போலவே, தற்போது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சமீபகாலமாகத் தொடர்ந்து ஐசிசி கோப்பைகளை வென்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிப்பயணம் வெறும் தொடக்கம் மட்டுமே என்று நான் நம்புகிறேன். போட்டியில் தொடர்ந்து உத்வேகம் கிடைப்பது முக்கியம் என்று நான் நம்புகிறேன்.
தற்போது அந்த உத்வேகம் ஆடவர், பெண்கள் அணிகளுக்கு கிடைத்துள்ளது. நாம் இந்த வேகத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த அணிகள் இன்னும் பல உலக கோப்பைகளை வெல்ல வேண்டும். இந்திய அணியின் வெற்றிப் பயணம் தொடரும் என்று நான் நம்புகிறேன். இந்த வெற்றிக்கு என தனியாக ரகசியம் ஏதுமில்லை.
இது முழுக்க முழுக்க வீரர்கள்- வீராங்கனைகளின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாகும். சர்வதேச கிரிக்கெட் வீரர்கள்- வீராங்கனைகள் தாங்கள் எட்டியிருக்கும் இந்தச் சாதனைகளை அடைவதற்காக மிகக் கடுமையாக உழைக்கின்றனர். ஆடுகளத்தில் விளையாடிச் சாதிக்கும் வீரர்கள் மட்டுமே இதற்கு முழு காரணம் அல்ல.
இந்த வெற்றிக்கு தங்கள் கடின உழைப்பை அர்ப்பணிக்கும் எண்ணற்ற நபர்களும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் மேற்கொண்டு வந்த முயற்சிகள் அனைத்தும் தற்போது முழுமையான வெற்றியாக கிடைத்திருப்பதையும், நாங்கள் எதிர்பார்த்த சாதனைகளை எட்டியிருப்பதையும் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆடவர் அணி மட்டுமல்லாமல், மும்பையில் மகளிர் அணியும் உலகக் கோப்பையை வென்ற அந்த தருணம் மிகவும் அற்புதமாக இருந்தது. இவ்வாறு ரோஹித் சர்மா தெரிவித்தார்.
