

ரியான் பராக், குமார் சங்கக்காரா
குவஹாட்டி: நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று (மார்ச் 30) முதல் லீக் ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்நிலையில், தங்கள் அணியை கேப்டனாக வழிநடத்த ரியான் பராக் சரியான தேர்வு என ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.
அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சன், இந்த சீசனுக்கு முன்னதாக டிரேடிங் முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்றார். இந்த சூழலில் அணியின் கேப்டனாக ரியான் பராக் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது தேர்வு குறித்து சங்கக்காரா விளக்கம் தந்துள்ளார்.
“சந்தீப் சர்மா, ரவீந்திர ஜடேஜா என அணியில் உள்ள வீரர்கள் பலரிடம் இது தொடர்பாக நாங்கள் பேசினோம். இது மிகவும் தெளிவாக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட செயல்முறை. கேப்டன் பொறுப்புக்கு சரி வருவார் என நாங்கள் கருதிய வீரர்களுடன் பலமுறை கலந்து பேசினோம். அவர்கள் அனைவரும் இந்த பொறுப்புக்கு தகுதியானவர்கள் தான். இருப்பினும் ரியான் பராக் சரியான தேர்வாக இருப்பார் என நாங்கள் கருதினோம்.
ஏனெனில் இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை மிகவும் கடினமானதாக இருந்தது. அதை அவர் சரியாக கையாண்டார். அதில் தனது பக்குவத்தையும், தெளிவான சிந்தனையையும் அவர் வெளிப்படுத்தினார். அதனால் அணியை கேப்டனாக வழிநடத்த அவரே சரியான தேர்வு என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
கடந்த சீசனில் மிடில் ஆர்டர் மற்றும் ஃபினிஷிங்கில் எங்களுக்கு சிக்கல் இருந்தது. அது குறித்து பேசினோம். சில கடினமான முடிவுகளை எடுத்தோம். வீரர்களும் அது சார்ந்து பணியாற்றி உள்ளனர். இந்த முறை அதை பேலன்ஸ் செய்துள்ளோம் என கருதுகிறோம்” என அவர் தெரிவித்தார்.
ரியான் பராக்: 24 வயதான ரியான் பராக், கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மாற்று கேப்டனாக அணியை வழிநடத்தி உள்ளார். கடந்த சீசனில் சஞ்சு சாம்சன் காயமடைந்த நிலையில், அவருக்கு மாற்றாக 8 ஆட்டங்களில் அணியை ரியான் பராக் வழிநடத்தினார். அதில் இரண்டு வெற்றிகளை மட்டுமே அந்த அணி பதிவு செய்தது. இருப்பினும் அவரது பேட்டிங் சராசரி 38.57 என இருந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 95 ரன்களை அவர் விளாசி இருந்தார்.
கடந்த 2019 சீசனில் ஐபிஎல் கிரிக்கெட்டில் ரியான் பராக் அறிமுகமானார். அப்போது முதல் இதுவரை அவர் விளையாடி உள்ள 7 ஐபிஎல் சீசன்களிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மட்டுமே ஆடியுள்ளார். கடந்த இரண்டு சீசன்களாக ராஜஸ்தான் அணி விளையாடிய அனைத்து ஆட்டத்திலும் அவர் விளையாடி இருந்தார். இதில் 2024 சீசனில் 573 ரன்களை குவித்து அசத்தி இருந்தார். மொத்தம் 84 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 1,566 ரன்களை அவர் எடுத்துள்ளார். பந்து வீசி ஏழு விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் அசாம் அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக 9 டி20 போட்டிகள் மற்றும் ஒரே ஒரு ஒருநாள் ஆட்டத்திலும் விளையாடி உள்ளார். கடந்த 2018-ல் ஐசிசி யு19 உலகக் கோப்பை தொடரில் பட்டம் வென்ற இந்திய அணியில் பராக் இடம்பெற்றிருந்தார்.