

ரிஷிகாந்த சிங் ( நடுவில் இருப்பவர்)
கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான 60 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் சனம்பம் ரிஷிகாந்த சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற , ஆண்களுக்கான 60 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் சனம்பம் ரிஷிகாந்த சிங், 'ஸ்னாட்ச்' பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ரிஷிகாந்த சிங் 'ஸ்னாட்ச்' பிரிவில் 121 கிலோவையும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 143 கிலோவையும் தூக்கி, மொத்தம் 264 கிலோ எடையை தூக்கினார். இந்தப் போட்டியில் மலேசியாவின் முகமது அனிக் கஸ்டன், மொத்தம் 273 கிலோ (121 கிலோ ஸ்னாட்ச் மற்றும் 152 கிலோ கிளீன் அண்ட் ஜெர்க்) எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார். கென்யாவின் ஜோசுவா மபோயா மொத்தம் 260 கிலோ (115 கிலோ ஸ்னாட்ச் மற்றும் 145 கிலோ கிளீன் அண்ட் ஜெர்க்) எடையுடன் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
பாரா பவர்லிஃப்டர் ஜந்து குமார் வென்ற வெண்கலப் பதக்கத்தைத் தொடர்ந்து, நடப்புப் போட்டிகளில் இந்தியா வென்ற இரண்டாவது பதக்கம் இதுவாகும். மேலும், இதுவே இந்தியாவின் முதல் வெள்ளிப் பதக்கமும் ஆகும்.