

கால்லே டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று இந்திய அணியின் அதிரடி பேட்டரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவிரைவில் 100 சிக்சர்களை விளாசி உலக சாதனை புரிந்துள்ளார்.
89 இன்னிங்ஸ்களில் 100 சிக்சர்களை விளாசிய ரிஷப் பண்ட் டெஸ்ட்டில் அதிவிரைவு 100 சிக்சர்கள் உலக சாதனை என்பது இந்த வடிவத்தின் வரலாற்றில் இவ்வளவு விரைவாக வேறு யாரும் எட்டியதில்லை. ஏனென்றால், இது போன்ற ஷாட்களை ஆடுபவர் ஒரே நபர் அவர்தான்.
லாஹிரு குமாரா வீசியது உள்நோக்கி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே, சற்று பேக் ஆஃப் லெந்த்தில் வீசப்பட்ட பந்து. அதை ரிஷப் பண்ட் ஆஃப் சைடில் சாய்ந்து, தன் கால்களை நகர்த்தாமல், வெறுமனே குனிந்து, பின்னர் அதைத் தனது வலது தோள்பட்டைக்கு மேல் தட்டிவிடுகிறார். டீப் ஃபைன் லெக் திசையில் பந்து சிறிது நேரம் ஆட்டத்தில் இருந்தது, பின்னர் பவுண்டரிக்கு வெளியே காணாமல் போனது, இதுதான் 100வது சிக்ஸ்!! இதுவே இந்த இன்னிங்சில் அவரது அரைசதம் நிறைவு செய்யும் ஷாட் ஆகவும் இருந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்கள் மற்றும் இன்னிங்ஸ் எண்ணிக்கை:
ரிஷப் பண்ட் 100 சிக்சர்கள் - 89 இன்னிங்ஸ்கள்.
பென் ஸ்டோக்ஸ் 138 சிக்சர்கள் - 220 இன்னிங்ஸ்கள்
பிரெண்டன் மெக்கல்லம் 107 சிக்சர்கள் - 176 இன்னிங்ஸ்கள்
ஆடம் கில்கிறிஸ்ட் - 100 சிக்சர்கள் - 137 இன்னிங்ஸ்கள்
ஜானி பேர்ஸ்டோ - 100 சிக்சர்கள் 178 இன்னிங்ஸ்கள்.
178 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி இன்று தன் இரண்டாவது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் அதிர்ச்சிகரமாக கட் ஷாட் ஆடப்போய் பெர்னாண்டோ பந்தில் எட்ஜ் எடுத்து டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார்.
தேவ்தத் படிக்கல் மீண்டும் ஒரு அட்டகாசமான இன்னிங்ஸை ஆடினார். பந்துகள் ஸ்பின்னர்களுக்கு சில ஸ்பாட்களில் பிட்ச் ஆகி திரும்பி எழும்பின. கடினமான பிட்ச்தான் ஆனால் படிக்கல் 6 பவுண்டரிகளுடன் பாசிட்டிவ் அணுகுமுறையுடன் ஆடினார்.
ராகுல் கொஞ்சம் தடவினாலும் பிறகு ஆக்ரோஷம் காட்டி 2 சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து பிரபத் ஜெயசூரியாவிடம் வெளியேறினார். சுப்மன் கில் 8 ரன்களில் ஜெயசூரியாவிடம் எல்.பி. ஆகி நடையைக் கட்டினார்.
துருவ் ஜுரெல் 7 ரன்களில் பெர்னாண்டோவின் ஷார்ட் பிட்ச் பந்தில் லெக் சைடில் விக்கெட் கீப்பர் கேட்சுக்கு வெளியேறினார்.
இந்நிலையில்தான் ரிஷப் பண்ட்டிற்கு தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஷார்ட் பிட்ச் சோதனை கொடுத்தனர், அவர் மிக அழகாக அதனைக் கையாண்டார். அந்த ஷார்ட் பிட்ச் உத்தியின் ஒரு பந்தில்தான் பண்ட் சிக்ஸ் விளாசி 100-வது சிக்சரை அடித்தார். ஆனால் 69 பந்துகளில் 66 ரன்களை கடினமான பிட்சில், கடினமான நேரத்தில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் விளாசி அவர் 69 பந்துகளில் இந்த ரன்களை எடுத்து கடைசியில் குமாராவின் பந்தில்தான் ஆட்டமிழந்தார்.
ஏற்கெனவே குமாரா தன் ஸ்பெல்லுக்கு வரும் போது அவரது முதல் பந்தை டவுன் த ட்ராக் இறங்கி மைதானத்திற்கு வெளியே சிக்ஸ் அடித்ததால் குமாரா மிகுந்த கடுப்பில் இருந்தார், பிறகு பண்ட்டின் 100வது சிக்சரும் இவர் பந்தில்தான், அதனால் வெறுப்பின் உச்சத்தில் இருந்த குமாரா பண்ட் விக்கெட்டை வீழ்த்தியவுடன் கொஞ்சம் ஓவராகவே கொண்டாடி விட்டார்.
கடைசியாக ஜடேஜாவும் குமாராவின் ஷார்ட் பிட்ச் பந்துக்கு கொடியேற்றி வெளியேற இந்தியா 2வது இன்னிங்ஸில் சற்று முன் வரை 179/7 என்று 357 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.