

கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு - உத்தரபிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் நடைபெற்று வந்தது. தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 455 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து பேட் செய்த உத்தரபிரதேச அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 113 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்தது. ரிங்கு சிங் 98, ஷிவம் சர்மா 18 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய உத்தரபிரதேச அணி 145.1 ஓவர்களில் 460 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ரிங்கு சிங் 247 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 176 ரன்கள் விளாசினார். ஷிவம் சர்மா 22, கார்த்திக் யாதவ் 20, குனால் தியாகி 5 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தமிழக அணி சார்பில் வித்யூத் 4, சாய் கிஷோர் 3, சரவண குமார் 2 விக்கெட்களை வீழ்த்தினர். 5 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி 21 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.
பாலசுப்ரமணியம் சச்சின் 59, நாராயண் ஜெகதீசன் 44 ரன்களில் ஆட்டமிழந்தனர். பிரதோஷ் ரஞ்ஜன் பால் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தார். ரிங்கு சிங்குவின் அதிரடியால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற உத்தரபிரதேச அணிக்கு 3 புள்ளிகள் வழங்கப்பட்டது. தமிழக அணி ஒரு புள்ளியை பெற்றது.