

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (கேகேஆர்) முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் ரிங்கு சிங், அனுக்குல் ராய் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
ஐபிஎல் தொடரில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷியும் அதிரடிகாட்டினர். வைபவ் அரோரா வீசிய ஒரு ஓவரில் வைபவ் சூர்யவன்ஷி 3 பவுண்டரிகளை விளாசினார்.
ஆட்டத்தின் 6-வது ஓவரை கேமரூடன் கிரீன் வீசினார். இந்த ஓவரில் ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி இருவரும் கூட்டாக 22 ரன்கள் விளாசினர். அரை சதத்தை நெருங்கிய நிலையில் சூர்யவன்ஷி அவுட்டானார். 28 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் அவர் 46 ரன்கள் சேர்த்து வருண் சக்ரவர்த்தி பந்தில் ரமன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து விளையாட வந்த துருவ் ஜூரெல் 5 ரன்கள் எடுத்த நிலையில், வருண் சக்ரவர்த்தி பந்தில் வீழ்ந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 29 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து, சுனில் நரைனின் சுழலில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்கள் அதிரடி காட்டாததால் அந்த அணி 29 ஓவர்களில் 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ரியான் பராக் 12, ஷிம்ரன் ஹெட்மயர் 15, டோனவன் பெரைரா 7, ரவீந்திர ஜடேஜா 9, ஜோப்ரா ஆர்ச்சர் 9, ரவி பிஷ்னோய் 0, பிரிஜேஷ் சர்மா ஒரு ரன் எடுத்தனர்.
கொல்கத்தா அணி தரப்பில் கார்த்திக் தியாகி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். சுனில் நரைன் 2 விக்கெட்களைச் சாய்த்தார். இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. ஆனால் முதல் பந்திலேயே கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் ஜோப்ரா ஆர்ச்சர். முதல் பந்தை எதிர்கொண்ட விக்கெட் கீப்பர் டிம் ஷெய்பர்ட், ஆர்ச்சர் பந்தில் போல்டானார்.
2-வது ஓவரில் அஜிங்க்ய ரஹானே ரன் கணக்கைத் தொடங்காமலேயே நந்த்ரே பர்கர் பந்துவீச்சில் துருவ் ஜூரெலிடம் பிடிகொடுத்து வீழ்ந்தார். அதன் பின்னர் வந்த அங்ரிஷ் ரகுவன்ஷி 10, கேமரூடன் கிரீன் 13 பந்துகளில் 27, ரோமன் பாவெல் 23, ரமன்தீப் சிங் 10 ரன்கள் சேர்த்து பெவிலியன் வந்தனர்.ஆனால் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிங்கு சிங்கும், அனுக்குல் ராயும் பொறுப்புடன் விளையாடி அணிக்கு முதல் வெற்றியைப் பெற்றுத்தந்தனர்.
19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி, இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ரிங்கு சிங் 34 பந்துகளில் 53 ரன்களும் (5 பவுண்டரி, 2 சிக்ஸர்), அனுக்குல் ராய் 16 பந்துகளில் 29 ரன்களும் (1 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
85 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தத்தளித்த நிலையில் ரிங்கு சிங்கும், அனுக்குல் ராயும் நிதானத்துடனும், அதே நேரத்தில் அடிக்க வேண்டிய பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விரட்டி ரன் குவித்தனர்.ராஜஸ்தான் அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 2, ஜோப்ரா ஆர்ச்சர், நந்த்ரே பர்கர், ரவி பிஷ்னோய், யஷ் ராஜ் புஞ்சா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. 3 விக்கெட்களை வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.அந்த அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 5 தோல்விகளுடன் 3 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
பஞ்சாப், கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் ராஜஸ்தான் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளைப் பெற்றுள்ளது.