

“சிட்னி டெஸ்ட் போட்டியே என் கடைசி போட்டி என்று அறிவியுங்கள் கவாஜா. இதை விட சிறந்த தருணம் உங்களுக்கு ஓய்வை அறிவிக்கக் கிடைக்கப் போவதில்லை” என்று உஸ்மான் கவாஜாவை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டிராபியில் பும்ரா இவரை சொல்லிச் சொல்லி வீழ்த்தியபோதே கவாஜாவை ஓய்வு பெறுங்கள் என்று கிளார்க் அழைப்பு விடுத்தார். ஆனால், கவாஜா செவிமடுக்காமல் தொடர்ந்தார்.
2022, 2023 தொடர்களில் கவாஜாவின் சராசரி 50-க்கும் மேல். ஆனால் கடந்த வருடம் கவாஜாவின் சராசரி 25 மட்டுமே. 2025-ல் வெறும் 36 மட்டுமே.
மெல்போர்ன் டெஸ்ட், அடிலெய்ட் டெஸ்ட்டில் ஸ்டீவ் ஸ்மித் உடல் நலமின்மை காரணமாக ஆட முடியாமல் போனதையடுத்து வாய்ப்பை மீண்டும் பெற்றார் கவாஜா, நன்றாகவே ஆடினார். ஸ்மித் இருந்தால் கூட அவர் அளவுக்கு ஆடியிருக்க முடியாது.
ஆனால், மைக்கேல் கிளார்க்கோ இதுதான் கவாஜாவுக்கு நல்ல நேரம், சிட்னி டெஸ்ட் உடன் ஓய்வு பெறுகிறேன் என்று தயவு செய்து அறிவியுங்கள் கவாஜா” என்கிறார்.
“கவாஜாவின் தேர்வு ஏதோ டோக்கன் தேர்வு என்று நான் நினைக்கவில்லை. மெல்போர்ன் டெஸ்ட்டில் கவாஜா தேர்வு செய்யப்பட்டார் என்றால் அது சிட்னிக்குமானதுதான்.
ஆனால், அவர் சிட்னியுடன் ஓய்வு பெறுவார் என்று கருதுகிறேன். ஓய்வு பெறுவதுதான் நல்லது. ஆஸ்திரேலியா தொடரை வென்றிருக்கும் போது அந்த நினைவுகளுடனும் சிட்னியில் ஒரு சதத்தையும் எடுத்து கவாஜா ஓய்வு பெறுவது மிகவும் அரிதாகக் கிடைக்கும் வாய்ப்பே” என்றார் மைக்கேல் கிளார்க்.
ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் மெக்டொனால்ட் கூறும்போது, “என் தரப்பிலிருந்து சொல்வதென்றால் ஓய்வு பெறுவதற்கான அறிகுறிகள் எதுவும் கவாஜாவிடமிருந்து எனக்கு வரவில்லை. இதை விவாதிப்போம். இந்த ஆண்டில் அவரது ஆட்டத்திறன் அணித் தேர்வுக்குரிய முறையில் நன்றாகவே இருந்ததாகத்தான் நான் கருதுகிறேன். ஆகவே சிட்னியில் அவர் இறங்குவார்.
அடுத்த தொடர் 8 மாதங்களுக்குப் பிறகுதான் எனும்போது அவர் ஓய்வுக்கு இப்போதே அவசரப்படுவானேன்?” என்றார் மெக்டொனால்ட்.
ஆஸ்திரேலியாவில் நிறைய வீரர்கள் டெஸ்ட் கதவைத் தட்டியபடியே இருக்கின்றனர். நேதன் மெக்ஸ்வீனி, மேட் ரென்ஷா, கெல்லவே, கூப்பர் கனோலி என்று அடுத்த வரிசை கிரிக்கெட் வீரர்கள் தயாராக இருக்கின்றனர்.