இங்கிலாந்து அணியின் மரியாதையை மீட்டெடுப்பதா, வீரர்களைப் பாதுகாப்பதா? - குழப்பத்தில் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணியின் மரியாதையை மீட்டெடுப்பதா, வீரர்களைப் பாதுகாப்பதா? - குழப்பத்தில் ஸ்டோக்ஸ்
Updated on
2 min read

ஆஷஸ் தொடரை இழந்தது, வீரர்களின் மோசமான ஆட்டம் அதற்கும் மேலாக குடிபோதை பிரச்சினை என்று பென் ஸ்டோக்ஸிற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். இந்நிலையில் நாளை மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட் தொடங்குகிறது. அணி வீரர்களைப் பாதுகாப்பதா, அல்லது இங்கிலாந்து அணியின் மானத்தை மீட்டெடுப்பதா என்கிற குழப்பத்தில் சிக்கிச் சின்னாபின்னமாகியிருக்கிறார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.

களத்தில் இங்கிலாந்து அணியின் ஆட்டம் ஒரு பெருங்கவலை என்றால் களத்திற்கு வெளியே நடத்தை ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வீரர்களின் நூசா கடற்கரை குடிவெறியாட்டமும் இப்போது மக்கள் மத்தியில் இங்கிலாந்து அணியின் மரியாதையை அதலபாதாளத்திற்குத் தள்ளியுள்ளது. மெல்போர்னின் ஒரு லட்சம் ரசிகர்களும் நூஸா குடிபோதை குறித்து இங்கிலாந்து வீரர்களை நிச்சயம் வறுத்தெடுக்கப் போகிறார்கள்.

இந்தக் கவலைகளிடையே 5-0 ஒயிட்வாஷ் வாங்காமல் குறைந்தது 4-1 என்றாவது தொடரை முடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் பென் ஸ்டோக்ஸ் இருக்கிறார்.

பென் ஸ்டோக்ஸ் இவையெல்லாம் பற்றி என்ன கூறுகிறார் என்று கேட்போம்: “இப்போது இந்தச் சூழ்நிலையை நான் எப்படிக் கையாளப்போகிறேன் என்பதுதான் என் வாழ்க்கையில் முக்கியமானது. அனைவரது நலமும் முக்கியம் குறிப்பாக கெட்ட பெயர் எடுத்த சில தனிநபர்களையும் காக்க வேண்டியுள்ளது. இங்கிலாந்து கேப்டனாக எனக்கு இப்போது பெரிய கடமை காத்திருக்கிறது.

இப்போதுதான் முதல் முறையாக இவ்வாறான பிரச்சனைகள் மக்களை எப்படி பாதிக்கும் என்பதை உணர்கிறேன். இங்கிலாந்து கேப்டனாக என் வீரர்களைக் காக்க வேண்டும் என்பது முதற்கடமையாக உள்ளது. இந்த பயணத்தில் இன்னும் சாதிக்க வேண்டிய இலக்கு உள்ளது. திட்டமிட்டபடி எதுவும் செல்லவில்லை.

இன்னும் 2 போட்டிகள் உள்ளன, எங்களிடம் இன்னும் நிறைய முயற்சிகள் ஆற்றல்கள் உள்ளன. என் வீரர்களை நான் பாதுகாக்க வேண்டும் அப்போதுதான் மீதமுள்ள இந்த 2 டெஸ்ட் போட்டிகளில் ஏதாவது செய்ய முடியும். இந்த 2 போட்டிகளை வென்றாக வேண்டும். என் வீரர்களை நான் காப்பாற்றியே ஆக வேண்டும் என்னால் இயன்ற வரையில் அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.

இப்போது என்னவெனில் வீரர்கள் நான் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை உணரவைத்தால்தான் இந்த நாட்டுக்காக இந்த 2 போட்டிகளில் செயல்திறனைக் காட்ட முடியும்.” என்றார்.

நிருபர்கள் ஸ்டோக்சிடம் திரும்பத் திரும்ப நூஸா குடிபோதை விவகாரத்தைக் கிளற, ஸ்டோக்ஸ் ஒரே பதிலைத் திரும்பத் திரும்ப அளித்தார், ‘நான் தான் ஏற்கெனவே சொன்னேனே, என் வீரர்களை நான் பாதுகாக்க வேண்டும்’ என்றார்.

“களத்தில் அணியை ஒன்று திரட்டி போட்டியை வெற்றி பெறும் பொறுப்பு எனக்கு இருக்கிறது, அதே வேளையில் இது போன்ற தருணங்களில் வீரர்களைக் காப்பதும் என் பொறுப்புதான். அவர்களை இதிலிருந்து விடுவித்து நல்ல மனவெளியை உருவாக்கினால்தான் களத்தில் அவர்களைச் செயல்பட வைக்க முடியும்.

இப்போதைக்கு 3-0 என்று பின் தங்கிய பிறகே நாம் என்ன செய்தாலும் என்ன பேசினாலும் அது துருவி ஆராயப்படும் என்பது எனக்குத் தெரியும். ஆஸ்திரேலியாவை விட்டு கிளம்பும்போது திரும்பிப் பார்க்கையில் பாசிட்டிவ் ஆக நினைத்துப் பார்க்க ஏதாவது செய்ய வேண்டும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

இங்கிலாந்து அணியின் மரியாதையை மீட்டெடுப்பதா, வீரர்களைப் பாதுகாப்பதா? - குழப்பத்தில் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி? - மான்டி பனேசர் பரிந்துரை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in