

ஆப்கானிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள், குறிப்பாக ரஷீத் கான் உள்ளிட்டோர், காபூலில் உள்ள ஒரு மருத்துவமனை மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளனர். இந்த தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பதிலளித்த ரஷீத் கான், பொதுமக்கள் வசிக்கும் இடங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்றும், இது போர்க்குற்றமாக கருதப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும், United Nations மற்றும் மனித உரிமை அமைப்புகள் இந்த சம்பவத்தை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மற்ற ஆப்கன் வீரர்களான முகமது நபி, நூர் அகமது , நவீன் உல் ஹக், இப்ராஹிம் ஜத்ரான் ஆகியோரும் இந்த தாக்குதலுக்கு எதிராக தங்கள் கவலைகளையும் கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர்.
ரஷீத் கான் தனது எக்ஸ் தள வலைப்பதிவில், காபூலில் பாகிஸ்தானின் வான் வழித் தாக்குதல் நடத்தப்பெற்றதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. அப்பாவி மக்கள் வசிக்கும் வீடுகள், கல்வி வளாகங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் மீது தெரிந்தோ தெரியாமலோ தாக்குதல் நடத்தினால் அது போர்க்குற்றமாகும். மனித உயிர்களுக்கு எந்தவித மதிப்பும் அளிக்காத காட்டுமிராண்டித்தனம், என்ற தொனியில் கூறியுள்ளார்.
இப்ராஹிம் ஜத்ரான் தன் பதிவில், “இரவு நான் மிகப்பெரிய வெடிச்சத்தத்தை காபூலில் கேட்டேன். சில கணங்களுக்குப் பிறகே மருத்துவமனையிலிருந்து பெரிய நெருப்புக் கரும்புகை எழுந்ததையும் பார்த்தேன். நாளை நோன்பு இருக்க வேண்டிய எங்கள் சகோதரர்கள் இப்போது இல்லை. என் எண்ணங்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நோக்கிச் செல்கிறது. காபூல் வலியில் உள்ளது நான் நீதிக்காக பிரார்த்திப்போம்.” என்று பதிவிட்டுள்ளார்.
அரசு தரப்பில், இந்த தாக்குதல் காபூலில் உள்ள ஒரு பெரிய போதை மறுவாழ்வு மருத்துவமனை மீது நடந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்து, தாங்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் தீவிரவாத அமைப்புகளின் முகாம்களை மட்டுமே குறிவைத்ததாக விளக்கம் அளித்துள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான பதற்றம் கடந்த மாதம் அதிகரித்த நிலையில், இந்த சம்பவம் மேலும் கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.