

புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது. அதேவேளையில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி தோல்வி அடைந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கான பந்தயத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறும்.
ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றிகளை குவித்தாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது. இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் நடப்பு தொடரில் 236.55 ஸ்டிரைக் ரேட்டுடன் 11 ஆட்டங்களில் 40 சிக்ஸர்களுடன் 440 ரன்கள் குவித்து அசத்தி உள்ளார். அவருக்கு டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், லுங்கி நிகிடி ஆகியோர் நெருக்கடி கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல் ஆகியோரும் அதிரடியாக விளையாடக்கூடியவர்கள். எனினும் ரியான் பராக் பார்மின்றி தவித்து வருவது பாதகமாக மாறி உள்ளது. நடப்பு தொடரில் அவர், 10 ஆட்டங்களில் 207 ரன்கள் சேர்த்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 143 ஆக உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் ராஜஸ்தான் அணி அனைத்து துறையிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.