

செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் கிளப்பில் சின்க்ஃபீல்டு கோப்பை செஸ் தொடர் நடைபெற்றது. 9 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் கடைசி சுற்றில் நேற்று இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் மோதினார். இந்த மோதல் 37-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
இதேபோன்று அமெரிக்காவின் வெஸ்ஸி சோ தனது கடைசி சுற்றில் உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தரோவுடன் டிரா செய்தார். 9 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தாவும், வெஸ்ஸி சோவும் தலா 5.5 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருந்தனர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் நடத்தப்பட்டது. இதில் 2 ரேபிட் போட்டிகளும் சமனில் முடிவடைந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட ஆர்மகெடான் ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெள்ளை காய்களுடனும் வெஸ்லி சோ கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடுபவர் டிரா செய்தாலே அது வெற்றியாகக் கருதப்படும் என்ற விதியினால் வெஸ்லி சோ ஆட்டத்தை டிரா செய்து சாம்பியன் பட்டம் வென்றார். பிரக்ஞானந்தா 2-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்தார்.
8-வது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்ற போதே இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். கிராண்ட் செஸ் டூர் தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பவர்களே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
பிரக்ஞானந்தா 34.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளார். வெஸ்லி சோ 34.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், அமெரிக்காவின் பேபியானோ கருனா 29.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் 28.5 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பிடித்து இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.