

புதுடெல்லி: இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவது சவால் அல்ல.. வரம் என இந்திய அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான வாஷிங்டன் சுந்தர், கடந்த 18 மாதங்களாக இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம்பெற்று சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் அவர் கூறும்போது, “இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் வீரராக இருப்பது மிகப் பெரிய வரம். ஏனெனில், இந்திய அணி எப்படி விளையாடிக் கொண்டிருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்திய அணிக்காக மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருப்பது அழகான வரம். என்னுடைய நாட்டுக்காக நிறைய போட்டிகளை வென்று கொடுக்க ஆவலோடு காத்திருக்கிறேன். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் அங்கம் வகிக்க விரும்புகிறேன்” என்றார்.