

பெங்களூரு: ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான போட்டிகளை பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடத்திக் கொள்ள கர்நாடக கிரிக்கெட் சங்கம் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது கர்நாடக மாநில அரசு.
ஐபிஎல் 19-வது சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, 2016-ம் ஆண்டு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் பெங்களூருவில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகள், கர்நாடக அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டவை என பிசிசிஐ தெரிவித்திருந்தது. கடந்த ஆண்டு ஆர்சிபி அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்திருந்தனர். இதன் பின்னர் மைதானத்தில் சர்வதேச தரத்திலான பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் வரை அங்கு போட்டிகள் நடத்த கர்நாடக அரசு தற்காலிக தடை விதித்திருந்தது.
இதனால் ஆர்சிபி அணியின் போட்டிகள் மீண்டும் பெங்களூருவில் நடத்தப்படுமா? அல்லது வேறு மைதானத்துக்கு மாற்றப்படுமா? என்ற சந்தேகங்கள் எழுந்தன. இதற்கிடையே ஆர்சிபி அணி நிர்வாகம் மாற்று ஏற்பாடாக ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தது.
இதுஒருபுறம் இருக்க கர்நாடக கிரிக்கெட் சங்கமும், ஆர்சிபி அணியும் ஐபிஎல் போட்டிகளின் போது சின்னசாமி மைதானத்தில் உயர்மட்ட அளவிலான பாதுகாப்புகளை வழங்குவதற்கும், ரசிகர்களுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் முன்வந்தன. இதையடுத்து மைதானத்தில் செய்யப்பட்டுள்ள கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கர்நாடக அரசு நியமித்த நிபுணர்குழு கடந்த 13-ம் தேதி ஆய்வு செய்தது.
அப்போது போட்டி நடைபெறும் நாளன்று செய்யப்படும் அனைத்து ஏற்பாடுகளும் ஒரு முழு அளவிலான ஒத்திகை மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இதுதொடர்பான விரிவான அறிக்கையை நிபுணர் குழு, கர்நாடக அரசிடம் வழங்கியது. இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், மாநில அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், ஆர்சிபி அணி நிர்வாகிகள் மற்றும் அந்த அணியின் நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனத்தின் அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்துக்கு பிறகு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டது.
என்னென்ன மாற்றங்கள்?
கூட்ட நெரிசலைத் தவிர்க்க 6 புதிய நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இருந்த வாயில்கள் மற்றும் நடைபாதைகள் 6 மீட்டர் அளவுக்கு விரிவாக்கப் பட்டுள்ளன. மைதானத்துக்கு வெளியே சுமார் 5,000 பேர் வரை காத்திருக்கக்கூடிய பிரத்யேகப் பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
டிக்கெட் கவுண்டர்களில் நெரிசலைத் தவிர்க்க டிஜிட்டல் டிக்கெட் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து மைதானத்துக்குள் நேரடியாக உள்ளே நுழையலாம்.
மைதானத்தைச் சுற்றிலும் கூடுதல் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் மற்றும் நவீன ஸ்கேனிங் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என பிரத்யேக வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேல் வரிசை இருக்கைகளுக்கு செல்லும் ரசிகர்கள் எளிதாக ஏறி இறங்க புதிய சரிவுப் பாதைகள் கட்டப்பட்டுள்ளன.