

சான் பிரான்சிஸ்கோ: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பே ஏரியாவில் உள்ள லெவிஸ் மைதானத்தில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பராகுவே - துருக்கி அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கிய 65-வது விநாடியிலேயே (1:05 நிமிடங்கள்) பராகுவே அணியின் மிட்பீல்டர் மத்தியாஸ் கலர்சா சுமார் 25 யார்டு தூரத்திலிருந்து வலுவாக அடித்த ஷாட் கோல் வலையை துளைத்தது.
இது நடப்பு உலகக் கோப்பை தொடரின் அதிவேக கோலாக அமைந்தது. இதனால் பராகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் பாதி ஆட்டத்தில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 45+3-வது நிமிடத்தில் பராகுவே அணியின் நட்சத்திர வீரர் மிகுவல் அல்மிரோனுக்கும் துருக்கி வீரர் மெர்ட் முல்டூருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது மிகுவல் அல்மிரோன் தனது வாயைப் பொத்தியபடி பேசினார். ஃபிபா புதிய விதிமுறைகளின்படி மீறி குற்றமாக கருதப்பட்டதால் மிகுவல் அல்மிரோனுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இதனால் 2-வது பாதி ஆட்டத்தில் பராகுவே அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. எனினும் பராகுவே அணியின் கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில் அரணாக நின்று துருக்கியின் கெனன்யில்டிஸ், கான் உசுன், டெனிஸ் குல் ஆகியோரின் கோல் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தினார்.
ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் மெரிஹ் டெமிரல் இலக்கை நோக்கி தலையால் முட்டிய பந்தும் நூலிழையில் தவறியதால் துருக்கியின் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்தது.
முடிவில் பராகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த துருக்கி அணி உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.
வாய் மூடி பேசியதால் ரெட் கார்டு
துருக்கி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பராகுவே அணியின் வீரர் மிகுவல் அல்மிரோனுக்கு முதல் பாதியின் இறுதிப்பகுதியில் ரெட் கார்டு வழங்கப்பட்டது.
துருக்கி அணியின் டிஃபெண்டர் மெர்ட் முல்டுர் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, அல்மிரோன் தனது கைகளால் வாயை மூடிக்கொண்டு ஏதோ பேசினார்.
மிகுவல் அல்மிரோன்
கால்பந்து போட்டிகளில் வீரர்கள் வாயை மூடிக்கொண்டு எதிரணி வீரர்களை இனவெறி அல்லது கடுமையான வார்த்தைகளால் திட்டுவதைத் தடுப்பதற்காக, நடப்பு உலகக் கோப்பையில் ஃபிஃபா ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, வாக்குவாதத்தின் போது ஒரு வீரர் வேண்டுமென்றே வாயை மூடிக்கொண்டு பேசினால் நடுவர் அவருக்கு நேரடியாக ரெட் கார்டு வழங்கலாம். அல்மிரோன் வாயை மூடிப் பேசியதை குறிப்பிட்டு துருக்கி வீரர் நடுவரிடம் முறையிட்டார். பின்னர்,
நடுவர் இவான் பார்டன் 'வீடியோ அசிஸ்டெண்ட் ரெஃப்ரி' (விஏஆர்) மூலம் சோதித்து, அல்மிரோனுக்கு ரெட் கார்டு வழங்கினார். இதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றிலேயே வாயை மூடிக்கொண்டு பேசியதற்காக ரெட் கார்டு பெற்ற முதல் வீரர் என்ற தேவையற்ற சாதனையை மிகுவல் அல்மிரோன் படைத்துள்ளார்.