சேல்ஸ்மேன் வேலையை விடுத்து தோனியால் கிரிக்கெட்டுக்கு வந்த பாக். வீரர் உஸ்மான் தாரிக்

சேல்ஸ்மேன் வேலையை விடுத்து தோனியால் கிரிக்கெட்டுக்கு வந்த பாக். வீரர் உஸ்மான் தாரிக்
Updated on
1 min read

பாகிஸ்தானின் புதிர் ஸ்பின்னர் உஸ்மான் தாரிக் சமீபத்தில் தனது பந்துவீச்சு ஆக்ஷன் குறித்து கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளார். ஆனால் அந்த விவாதங்களின் நடுவில், அவரது வாழ்க்கை பயணம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

இவரது ஆக்‌ஷன் கிட்டத்தட்ட கேதார் ஜாதவ் அல்லது ரியான் பராக் போல இருக்கும். இதனால் இவர் ஆக்‌ஷன் மீது கடும் சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.

ஒரு காலத்தில் அவர் கிரிக்கெட் வீரர் அல்ல… துபாயில் ஒரு சாதாரண சேல்ஸ்மேன். அப்போது ஒரு நாள் அவர் MS Dhoni: The Untold Story என்ற திரைப்படத்தை பார்த்தார். இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான MS Dhoni அவர்களின் வாழ்க்கை கதையை சொன்ன அந்த படம், உஸ்மானின் உள்ளத்தில் ஒரு தீப்பொறியை ஏற்படுத்தியது.

ரயில்வே டிக்கெட் கலெக்டராக இருந்த தோனி எப்படி கிரிக்கெட் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தார் என்று அந்தப் படத்தில் தோனியின் வாழ்க்கை வரலாறு வார்க்கப்பட்டிருக்கும். இதைப் பார்த்துத் தான் உத்வேகம் பெற்று கிரிக்கெட்டுக்கு வந்ததாக உஸ்மான் தாரிக் தெரிவித்துள்ளார்.

“நானும் ஒருநாள் என் நாட்டுக்காக விளையாட வேண்டும். என்ற கனவு அந்த நிமிடத்திலேயே பிறந்தது.” என்று கூறியுள்ளார் உஸ்மான் தாரிக். அந்த ஊக்கத்தால், துபாயில் இருந்த தனது வேலைக்குத் பிரியாவிடை கொடுத்து விட்டு, பாகிஸ்தானுக்கு திரும்பி முழுநேர கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் பல சவால்கள், நெருக்கடிகள் இருந்தாலும், அவர் மனம் தளரவில்லை.

அவரது கடின உழைப்பின் பலன் விரைவில் கிடைத்தது. கரீபியன் பிரீமியர் லீக் (CPL) போட்டியில் 20 விக்கெட்டுகள் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த செயல்பாடே அவரது வாழ்க்கையை மாற்றியது.

இன்னும் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், கடந்த ஆண்டு அவர் தனது திருமண வேலைகளில் இருந்தபோது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.

“நீங்கள் தேசிய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள்” என்ற செய்தி முதலில் அவருக்கு ஒரு ஜோக் போல தோன்றியது. ஆனால் அது உண்மைதான்! அந்த அழைப்பு அவரது கிரிக்கெட் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.

இதுவரை அவர் பாகிஸ்தானுக்காக நான்கு T20 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், ஓவருக்கு ஆறு ரன்களுக்கும் குறைவான எகானமி ரேட்டுடன் அவர் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

துபாயில் ஒரு சாதாரண விற்பனையாளராக இருந்தவர்… இன்று தனது நாட்டுக்காக சர்வதேச மேடையில் விளையாடும் வீரர்! இந்த உத்வேகத்துக்குக் காரணம் உலக கிரிக்கெட்டில் பலரையும் கடந்த 20 ஆண்டுகளாக உத்வேகப்படுத்தி வரும் ஆளுமை எம்.எஸ்.தோனி என்பது தல ரசிகர்களுக்கு மட்டும் பெருமிதமல்ல, கிரிக்கெட்டுக்கு மட்டும் பெருமிதமல்ல இந்தியாவுக்கே பெருமிதம் தான்.

சேல்ஸ்மேன் வேலையை விடுத்து தோனியால் கிரிக்கெட்டுக்கு வந்த பாக். வீரர் உஸ்மான் தாரிக்
T20 WC 2026 அலசல்: சர்ச்சையை உருவாக்கும் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in