

முலான்பூர்: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்கள் குவித்து மிரட்டியது.
பிரியன்ஸ் ஆர்யா 37 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 93 ரன்களும், கூப்பர் கானொலி 46 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 87 ரன்களும் விளாசினர். 255 ரன்கள் இலக்குடன் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. நடப்பு சீசனில் 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள பஞ்சாப் அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை.
அந்த அணி 11 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. லக்னோ அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் கூப்பர் கானொலி கூறியதாவது: வீரர்களுக்கு எந்த விஷயங்கள் சரியாக அமைகின்றன என்பது குறித்து நாங்கள் அனைவரும் விவாதிப்போம். மேலும் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கும் சில யுக்திகளில் இருந்து கற்றுக்கொள்வோம்.
ஒருவரிடமிருந்து மற்றவர் இத்தகைய சில விஷயங்களை எடுத்துக் கொள்வதை விரும்பிச் செய்கிறோம். நாங்கள் அனைவரும் தொடர்ந்து முன்னேற முயற்சிக்கிறோம், அதுதான் இந்த விளையாட்டின் அடிப்படை. சிறந்த அணியாக உருவெடுக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.
கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தனது செயல்பாடுகளின் வாயிலாக முன்னுதாரணமாகத் திகழ்கிறார். தன்னைச் சுற்றியுள்ள வீரர்கள் எப்போதும் சவுகரியமாக உணர்வதை அவர் உறுதி செய்கிறார். தொடர்ந்து முன்னேறுவதிலும், மற்றவர்களை ஊக்குவிப்பதிலும் அவர் எப்போதும் முனைப்புடன் இருக்கிறார். பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் ஆகிய இருவரும் தங்களின் ஆட்டத்தை தங்களுக்குரிய பாணியிலேயே அணுகுகிறார்கள். இவ்வாறு கூப்பர் கானொலி கூறினார்.